பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்69

அந்நிலையில் நில்லாமல் அப்பாலும் ஓதுகின்றான்;
நூல்பகரார் என்று நுவன்றுவைத்த மாணவர்க்கும்
நூல்பகர்ந்து பால்புகட்டி நோய்நீக்குந் தாயானான்;
“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் கள்ளுண்டல்
சான்றோர் முகத்துவகை சார்ந்திடுமோ? ஆதலினால்
உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரால்
எண்ணப் படவேண்டார்” என்று களிமகற்கும்
பாடம் உரைக்கின்றார் பண்பாட்டை ஊட்டுதற்கு
நாடும் அறநெறியை நன்கு நவில்கின்றான்;
“மாண்முயற்சி யின்றி மடிபுரிந்து வாழ்வீரேல்
காண்பா ரிடித்துக் கழறுதற்கே ஆட்படுவீர்,
உற்ற குடியை உயர்குடியா வேண்டுபவர்
முற்ற மடியாண்மை மாற்றி முயன்றொழுக
வேண்டு” மெனக் கூறி விரும்பிப் புகட்டிமடி
யாண்டவர்க்கும் நல்ல அறிவுரைக்கும் ஆசான்;
பிணக்கனுக்குந் தீய பிணியனுக்கும் கெட்ட
சினத்தனுக்கும் மந்தனுக்கும் சேர்த்தே அறஞ்சொன்னான்
காமிக்கும் மானிக்குங் கள்வன் தனக்குமிழி
பாவிக்கும் ஏழைக்கும் பாடம் உரைக்கின்றான்;
ஆர்த்திருக்கும் நெஞ்சில் அழுக்கா றவாவெகுளி
சேர்த்திருக்கும் மாசெல்லாம் தேய்த்தே அகற்றிவிட்டுத்
தூவுடைய அன்பதனில் தோய்த்தெடுத்துச் செவ்வியஓர்
நாவென்னுந் தூரிகையால் நல்லான் மனத்திரையில்
ஒப்பில் அறமென்னும் ஓவியத்தைத் தீட்டிவைத்தான்
செப்பில் அடங்குவதோ தேவன் திறமெல்லாம்?
சீர்மை அரசியலாம் செந்நிலத்தைப் பண்படுத்த
நேர்மை பெறுமமைச்சை ஏர்முனையாக் கொண்டுழு
தெஞ்சாப் பொருள்வித்தை எங்கும் மிகத்தூவி,