பக்கம் எண் :

78கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

பெட்டகத்தே பெருநிதியம் நிறைந்தி ருந்தும்
       பேழையினைத் திறந்துணர மாட்டா திங்குத்
தட்டெடுத்துத் திரிகின்றார்; தமது செல்வம்
       தரையகத்துப் புதையலெனக் கிடந்தும் தோண்டி
தொட்டெடுத்துத் தாம்நுகர்ந்து, பிறருக் கீந்து
       தோளுயர்த்தி வாழாமல் மற்றோர் பின்னே
கெட்டலைந்து திரிகின்றார்; இனிமேல் அந்தக்
       கீழ்மையெலாம் போயொழியும் குறள் உணர்ந்தால்

நல்வாழ்வை அடைவதற்கு விழையும் மாந்தர்
       நடத்திவரும் பயணத்தில் தொடர்ந்து செல்லப்
பல்வேறு வழியுண்டு; சான்றோர் செல்லும்
       பண்பட்ட ஓர்வழியுண் டிடப்பு றத்தே
செல்வாரும் அதைவிடுத்து வலப்பு றத்தே
       செல்வாரும் காட்டுகிற வழிகள் உண்டு;
பொல்லாத குறுக்குவழி ஒன்றும் உண்டு;
       பொய்யான இருட்டுவழி ஒன்றும் உண்டு.

காரிருளில் வழிநடக்க விழைதல் வேண்டா;
       கதிரவனார் காட்டுகிற வழியே செல்க;
பேரிருளிற் கொண்டுய்க்கும் வழிகள் வேண்டா;
       பெரும்புலவன் வள்ளுவன்சொல் வழியே செல்க;
ஈரமிலாச் சுடுமணலில் செல்ல வேண்டா;
       இருபுறமும் பொழில்சூழும் வழியே செல்க;
கூரறிவுக் கண்ணுடையார் விழியை மூடிக்
       குழிவீழப் பார்ப்பாரோ? கொடுமை யன்றோ?

குறள் விழா, காரைக்குடி

25.1.1976