பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்77

பாட்டுக்குள் வழியெல்லாம் சொல்லி வைத்தான்
       பார்த்தபினும் இலைஎன்றால் ஊர்சி ரிக்கும்;
ஏட்டுக்குள் இருப்பதனை எடுத்துப் பார்த்தால்
       எல்லாமே புரிந்துவிடும் நலமும் ஆகும்.

அகில்கொடுத்த புகைமணத்தைப் பேழைக் குள்ளே
       அடைத்துவிட முயலுவரேல் அடைந்தா போகும்?
துகிலெடுத்துச் சூரியனை மறைத்து நின்றால்
       தோன்றாமல் சுடரென்ன மறைந்தா போகும்?
திகில்கொடுத்த இருள்கிழித்துக் கிழக்கு வானில்
       செங்கதிரோன் தகதகக்கத் தோன்றி விட்டான்
முகில்கிழித்து வெளிக்கிளம்பி முகத்தைக் காட்டும்
       முழுமதிபோல் குறள்நெறிகள் ஒளிரக் கண்டோம்.

திருக்குறளின் வழியிங்குத் திறந்தி ருந்தும்
       திரைப்படத்தின் வழியன்றோ நாடு கின்றார்;
உருப்படுமா அவரெண்ணம்? நாட்டில் நன்மை
       உயர்ந்துவரச் சரிப்படுமா? போன போக்கில்
மருட்கொளிபோல் பொறுப்புடையார் நடந்து சென்றால்
       மதியுடையார் நகைக்காமல் யாது செய்வர்?
நெருக்கடியில் கலைந்து விடும் சாயப் பூச்சை
       நினைந்துசெலின் நாடன்றோ பாழில் வீழும்!

கலகத்தை விட்டொழிக்க மக்கட் பண்பு
       கனிந்துநலம் செழித்திருக்க பொய்ம்மை யாவும்
கலகலத்துப் போயொழிய, உள்ள மெல்லாம்
       கடல்போல விரிந்திருக்கப், பகைமை நீங்கி
உலகத்தில் ஒற்றுமைகள் நிலைத் திருக்க
       உள்ளுவரேல் வள்ளுவரே துணையாய் நிற்பர்;
இலவடுத்த கிளிபோல எதையோ நம்பி
       ஏமாந்து திரிகின்றார் பேதை மாந்தர்