பக்கம் எண் :

82கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

இன்றொன்று நாளையொன் றேற்ற வகைதெரிந்
தொன்றொன்றாச் சொல்லி உயர்த்திவரும் அப்பள்ளி;
தானென்ற தற்செருக்கைத் தள்ளித் தனக்காகத்
தானென்ற பேராசை தன்னைத் தகர்த்தெறிந்
தெல்லாரும் ஒன்றென்றே எண்ணுகிற ஒப்புரவைச்
சொல்லாமற் சொல்லிச் சுடரேற்றும் நற்பள்ளி;
பள்ளியெனும் இல்வாழ்வில் பங்குடையோர் இவ்வனைத்தும்
உள்ளமுறக் கற்பதைத்தான் ஓதிவைத்தார் கற்பென்று;
பாரில் அதைமாற்றிப் பாவையர்க்கு மட்டுமென்று
கூறிப் பிரித்துரைத்தார் கொண்டவனுந் தப்பிவிட்டான்,
வீடில்லை பொன்னில்லை வேண்டும் பொருளில்லை
தோடில்லை மற்றுந் துணியில்லை என்றாலும்
நீங்காத பேரன்பு நெஞ்சில் நிறைந்திருந்தால்
தாங்காத பேரின்பந் தானேவந் தெய்திவிடும்;
*ஒன்றன்கூ றாடை உடுப்பவரே யானாலும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை எனவுரைத்த
மூத்தோர் மொழிப்பொருளை முன்னிறுத்தி நாம்வாழின்
பூத்துக் குலுங்கும் பொலிவு.

இலக்கியப் பேரவை
ஈரோடு
23.12.1967


* “ஒன்றன் கூறாடை ... வாழ்க்கை” - கலித்தொகை