பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்81

சஞ்சலத்தைப் போக்கிவரும் வஞ்சியரே நற்பெண்டிர்;
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காக்குஞ் சோர்விலாத் தோகையரே நற்றுணையாம்;
பேரின்பம் உண்டென்று பேசிடுவர் கண்டவர்தாம்
யாரென்றால் நானென்று யாரும் வருவதில்லை;
செவ்வியநல் இல்வாழ்க்கை சீர்பெற் றிடநடந்தால்
அவ்வின்பம் ஈங்கே அடைந்து நுகர்ந்திடலாம்;
இல்லவள் மாண்பானால் இல்லதென்? நல்லாற்றின்
இல்லறஞ் செல்லுங்கால் எல்லாமே வந்தெய்தும்;
இல்லற மென்னும் இனியதோர் வாழ்க்கையினைப்
பல்லறங்கள் கற்பிக்கும் பள்ளியெனச் சொல்லிடுவர்;
*பன்னும் பொதுநலத்திற் பற்றொன்று மில்லாமல்
தன்னந் தனியாய்த் தனக்கென்று வாழ்கின்ற
காட்டு விலங்கேபோற் கண்மூடிக் கொள்கைகளை
வேட்டுத் திரியாமல் வேண்டி யுதவிடவும்,
ஏனையோர் துன்பமோ இன்பமோ யாதெனினும்
தானுமது பெற்றதுபோல் தன்னுள் நினைந்தன்பு
கொண்டொழுக வேண்டுமெனுங் கொள்கை பயின்றிடவும்,
அண்டையில் வாழ்வோர்பால் அன்பைப் பெருகவிட்டு
மெள்ளநம் உள்ளம் விரிவடையச் செய்திடவும்
கள்ளந் தொலைத்துக் கனிவுளத்தைப் பெற்றிடவும்,
நன்றென்றுந் தீதென்றும் நாமே பகுத்துணர
நின்றுரைக்கும் பள்ளி நிகரில்லா இல்லறமே;
எத்துயரம் வந்தாலும் ஏற்று மனத்தகத்தில்
அத்தனையுந் தாங்கும் அளப்பரிய வல்லமையும்,
உள்ளம் அலைந்துமிக ஓடிக் கலங்காமல்
தெள்ளத் தெளியவைத்துச் சீர்செய்யும் சிந்தனையும்,


*பன்னும் - சொல்லப்படுகிற