பக்கம் எண் :

84கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

25
எந்நாளோ

அறத்தாலே வருவதுதான் இன்ப மென்றே
       ஆதிமகன் ஓதிவிட்டான்; வேறு வேறு
திறத்தாலே வருவதுதான் இன்பம் போலத்
       தெரிந்தாலும் நிலையான இன்பம் அன்று;
மறத்தாலே பெறத்தானே முயலு கின்ற
       மாந்தரையே காணுகின்றோம்; அதனை நீக்கும்
குறிப்பேனுங் காணவிலை; கோவில் கட்டிக்
       கொலுவைக்குங் கடவுளர்க்குங் குறைவே யில்லை.

வள்ளுவனை உலகினுக்குத் தந்து நின்று
       வான்புகழைத் தமிழ்நாடு பெற்ற தென்று
அள்ளுதமிழ்ப் பாரதிதன் பாட்டிற் சொன்னான்;
       அதன்பொருளை ஓர்ந்துணர மாட்டா தாகி,
வள்ளுவனை விற்றதுபோல் நினைந்து கொண்டு,
       வள்ளுவற்கும் நமக்குமினி உறவே இல்லை
உள்ளுவதும் முறையிலைஎன் றெண்ணிப் போலும்
       ஒதுக்கியது தமிழ்மறையைத் தமிழர் நாடு.

சாதியினால் சமயத்தாற் பிளவு பட்டுத்
       தனியுடைமைப் போக்கதனால் தாழ்வு பட்டு
மோதுண்டு போகாமல் காத்து நிற்கும்
       முன்னேற்றக் கொள்கைஎனும் சமத்து வத்தை
ஓதுகின்ற குறள்நூலைப் பெற்றி ருந்தும்
       ஒன்றேனும் பற்றாமல் ஒழுகு கின்றோம்
தீதகன்று மாந்தரெலாம் வாழ வேண்டிச்
       செயல்வடிவம் தருதிருநாள் எந்த நாளோ?