98 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
அகப்பொருளைப் புறப்பொருளாச் செய்ய மாட்டார் அதன்செவ்வி நன்குணர்ந்த அந்த வீட்டார்; தகப்பனென அன்னைஎனப் பெயர்கள் கொண்டு சரிநிகராய் ஒருமனமாய் வாழ்தல் கண்டேன்; மகப்பெறுதல் ஒன்றுமட்டும் குறியாக் கொள்ளார் மாண்புடைய இல்வாழ்வுப் பயனே கொள்வார். பெற்றுவிட்டோம் பிள்ளைகளை, யாது செய்வோம்? பேணுதற்கும் வகையற்றோம் என்று நெஞ்சில் உற்றதுயர் தாங்காமல் புலம்ப வில்லை ஓரிரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாலே; வெற்றுடலின் கவர்ச்சிகளில் மயங்க வில்லை விளைந்துவரும் உளப்பண்பை நயந்து வாழ்ந்தார்; கற்றவரை உருவாக்க வேண்டு மென்ற கடமையினால் நாட்டுக்கும் நன்மை செய்தார். |