30 வள்ளுவர் உலகில்... 3. மக்கள் பெற்றார்க்குப் புகழ்சேர்க்கும் மக்கள் கண்டேன் பெரியோர்சொற் படிநடக்கும் மக்கள் கண்டேன் கற்றாரை ஆசானை மதித்தல் கண்டேன் கல்வியிலே நெஞ்சூன்றிப் பயிலக் கண்டேன் வெற்றார வாரங்கள் முழங்கக் காணேன் விளைகின்ற நற்பயிரை முளையிற் கண்டேன் சற்றேனும் களியாட்டம் காண வில்லை தகுமக்கள் வள்ளுவரின் உலகிற் கண்டேன். முகம்மறைக்கப் பிடர்மறைக்கத் தொங்கு கின்ற முடிவளர்த்துத் திரிகின்ற மக்கள் இல்லை; நகம்மறைக்கத் தெருத்துடைக்கத் துவளும் பாங்கில் நாகரிகக் காற்சட்டை யணிவா ரில்லை: நகையெழுப்பிக் குரலெழுப்பித் தெருவின் நாப்பண் நங்கையர்க்குக் கிலியெழுப்பிச் செல்வா ரில்லை; தொகைபெருக்கிச் செலவழித்துத் தொலைத்து விட்டுத் துயர்பெருக்கிக் கலையழித்துத் திரிவா ரில்லை. பழிபிறங்காப் பண்புபெற முனைவா ருண்டு பண்பழித்துப் பழிபிறங்க நினைவா ரில்லை; விழியுறங்கும் வேளையிலும் பயில்வா ருண்டு விழித்துவிட்டு நடுப்பகலில் துயில்வா ரில்லை; பழிதவிர்ந்த கலையறிவைத் தெரிவா ருண்டு பகுத்தறிவைப் பாழ்படுத்தித் திரிவா ரில்லை; மொழிவிளங்கும் நூலறிவைக் கற்பா ருண்டு மூளைதனைப் பிறமொழிக்கு விற்பா ரில்லை. |