100 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
31 வள்ளுவர் உலகில்... 4. சுற்றத்தார் இன்பத்தில் துய்க்குங்கால் சுற்றி ஈண்டி இனிதுமனம் மகிழ்கின்ற சுற்றம் உண்டு; துன்பத்தில் துவள்கின்ற போதும் வந்து சூழ்ந்திருந்து துணைசெய்யும் சுற்றம் உண்டு; பொன்பெற்று வளம்பெற்று வாழும் போது *புகல்தந்து தன்சுற்றம் தழுவி நின்று தன்மட்டில் வாழாது பிறரும் வாழத் தாம்பெற்ற இன்பத்தைப் பகிர்வா ருண்டு. எமதுநிலை கேளீரென் றிசைக்கும் முன்னே எழுந்தோடி வந்துதவும் கேளி ராகி, எமதுயிரில் எழுமுணர்வில் கிளைத்துத் தோன்றி இடைமுறியா அன்புடைய கிளைக ளாகி, அமுதெனினும் மருந்தெனினும் பகிர்ந்து வாழ ஆவலுறும் பங்காளி யாகி, நெஞ்சில் கமழுறவு செழித்திருக்க இனிது பேசிக் களிப்பூட்டும் சுற்றத்தார் அங்கே உண்டு.
*புகல் - புகலிடம் |