இயல் - 6 மாவேழன் ஏறிவந்த பரிமா தன்னை வயந்தநகர்ப் பெருவீரர் கவர்ந்து சென்றார். வயந்தநகர்ப் பெருவீரர் சிலர்தாம் கூடி மலைச்சரிவின் நெறியிடையே வருவோர் ஆண்டு வயங்கெழுமும் ஒருபரிமான் கலனை யின்றி வாய்பற்றுங் கடிவாளக் கட்டு மின்றி நயந்துபசும் புன்மேய்ந்து திரியக் கண்டார்; நல்லியல்சேர் இவுளியதன் தோற்றங் கண்டு மயங்கினராய்க் கவர்ந்துசெலக் கயிறு வீசி மடக்கினர்அம் மாமடங்கல் மடங்க வில்லை.19 திடங்காணும் அம்மறவர் திரண்டு நின்று திறமுழுதும் பயன்படுத்தி முயன்றா ரேனும் அடங்காது தப்பியது வேழன் பாய்மா; ஆசைமனம் அடங்காமல் எழுந்து விட்டால் படும்பாடு படுவரன்றி விட்டார் யாரே? பாய்புரவி பற்றுதற்கே முனைந்து நின்றார்; கடன்காரன் இரக்கமிலார் நடுவில் நின்று கலங்குதல்போல் அப்பரிமான் கலங்கக் கண்டார். 20 சுருக்கிட்டு வலித்தார்கள்; கனன்று சீறித் துள்ளுபரி கனைத்தமையால் வீரர் அஞ்சி வெருக்கிட்டு விரைந்தார்கள்; பதுங்கி நின்று வெற்றிகொள வஞ்சனையாற் சூழ்ந்து வந்தார்; ‘செருக்குற்ற புரவிதனை அடக்க லின்றித் திரும்புகிலோம்’ எனவுரைத்துக் கயிறு வீசிப் பெருங்குற்ற தோள்வலியாற் பிணித்தி ழுத்தார்; பெரும்பொழுது போராடிக் களைத்த தாங்கே21
வயம் - வெற்றி, கலனை - சேணம். இவுளி - குதிரை. மாமடங்கல் - சிங்கம் போன்ற குதிரை. |