பக்கம் எண் :

வீரகாவியம்279

உறவெழுந்து கண்துடைத்து நிமிர்ந்தான்; ஆங்கண்
      ஓவியத்துப் பாவையென ஒருத்தி நின்றாள்;
திறமிகுந்த உளம்நடுங்க உடல்வி யர்க்கத்
      திகைத்திருந்தான் பகைப்புலத்தும் திகைப்பே யில்லான் 39

இவளனைய எழில்மகளை உலகில் யாண்டும்
      இதன்முன்னர் அவ்வீரன் கண்ட தில்லை;
குவளைவிழி கொவ்வையிதழ் பவழ மேனி
      கொண்டவளை அழகுருவை இன்று கண்டான்;
தவளநிறத் துகிலுடுத்த தையல் நோக்கித்
      தலைகுனிந்தாள் கடைக்கணித்தாள் இதழின் ஓரம்
தவழுமெழிற் புன்னகையைக் காட்டி நின்றாள்;
      தனையிழந்தான் கனவிதுவோ எனநி னைந்தான்.40


அரவம் - ஒலி, தவளம் - வெண்மை.