என்றுபல நினைந்திரங்கி உழலும் வீரன், ஏந்திழையின் கருமேகச் சுருளின் கூந்தல் ஒன்றுமலர் ஒன்றங்கு நிலத்திற் கண்டான்; ஓடோடி உவந்ததனை எடுத்து மோந்து, வென்றகன்ற எழிலணங்கின் நினைவே விஞ்சி, விழிமூடிக் கற்பனையில் மிதந்து சென்றான்; துன்றமரின் புறப்பொருளே வாழ்வாக் கொண்டோன் துறைசெறிந்த அகப்பொருளின் வாயில் கண்டான்44 காதலெனும் அகம்புகுவோர் இமைகள் என்னும் கதவுகளை மூடாராய் இமையா நாட்டம் பூதலமேற் பெற்றிடுவர்; இரவில் கட்டிற் புழுவாகப் புரண்டிடுவர்; வெய்து யிர்ப்பர்; சாதலினுங் கொடுந்துயரில் உழல்வர்; ஈது தண்கடல்சூழ் ஞாலத்தின் இயற்கை யன்றோ? வேதனையில் உழல்வீரன் உறக்க மின்றி வெய்துயிர்த்துப் புரண்டிருந்தான் பஞ்சின் சேக்கை45 சாதலுக்குத் துணைபோகும் சமரே கண்டோன் காதலுக்குத் துணையாகும் உயிரைக் கண்டான்; வீதலுக்குத் துணைபோகும் வேலே கண்டோன் விழைவுக்குத் துணையாகும் விழியைக் கண்டான்; வேதனைக்குத் துணைபோகும் களமே கண்டோன் விண்வெளிக்குத் துணையாகும் நிலவைக் கண்டான்; காதினிக்கப் போர்முரசின் ஒலியே கேட்டோன் கடுந்தனிமைப் பெருமூச்சின் ஒலியைக் கேட்டான்.46 குறையிரவும் சிறிதேனும் நகர்த லின்றிக் குடியிங்குக் கொண்டதென உணர்வு கொண்டான்; நிறைமதியின் தண்கதிர்கள் பகைவர் வீசும் நெடுவேல்க ளெனப்பாயத் தளர்ச்சி கொண்டான்; விரைமலரின் இதழ்களெலாம் உடலு றுத்தி வெப்புறுத்தித் துயர்ப்படுத்த வெறுப்புங் கொண்டான்; அறைமதில்கள் சிறைமதில்போல் விளங்கக் கண்டான்; அரும்பிவரும் காதலெனும் நோயில் வீழ்ந்தான்.47
ஒன்றும்மலர் - பொருந்திய மலர். விஞ்சி - மிகுந்து துன்றுஅமர் - நெருங்கியபோர். புறப்பொருள் - வீரம் துறை - பலவகைத்துறைகள் பொருந்திய. அகப்பொருள் - காதல். நாட்டம் - விழி. சேக்கை - படுக்கை. சமர் - போர். வீதல் - இறப்பு. |