பக்கம் எண் :

வீரகாவியம்299

பொருத்தியுனை நினைந்திரங்கிக் கவல்கின் றானால்
      போயொருசொல் புகன்றிடவாய்ப் பில்லை என்றேன்;
அருத்திமிகு காதலினால் நின்னைக் காணும்
      ஆவலினால் துடிக்கின்றான் வீரன்’ என்றாள்.85

வாடுகின்ற உயிராட்குத் தோழி சொன்ன
      வாய்மொழிகள் அமுதாகி உடல்சி லிர்க்க
மாடுநின்ற தோழியினைத் திணறும் வண்ணம்
      மகிழ்ச்சியினால் அணைத்திறுகக் கட்டிக் கொண்டாள்;
பாடுகின்ற குயிலானாள், விரித்த தோகைப்
      பச்சைமயில் அவளானாள், வெற்றி வாகை
சூடுகின்ற வீரனுக்குத் துணையே ஆனாள்;
      தூமலரின் பஞ்சணைவீழ் கொடிபோல் ஆனாள்.86

வீழ்ந்தவளப் பஞ்சணையுட் புரண்டாள், ஆடை
      விலகுவதும் உணராமல் உருண்டாள், வண்ணம்
சூழ்ந்ததலை யணையுள்முகம் புதைத்தாள், மீண்டும்
      தோகைஎழுந் தாடியின்முன் நகைத்தாள், நின்று
தாழ்ந்தவிழ்ந்து சரிகுழலை முடித்தாள், நெற்றி
      தரித்தநறுந் திலகத்தை வடித்தாள், தோளின்
வீழ்ந்தொதுங்கும் ஆடையினைத் திருத்தி நெஞ்சம்
      விம்மவரும் மகிழ்ச்சியினால் சிரித்து வந்தாள்.87

‘கன்னியர்தம் நெஞ்சத்திற் குடி யிருக்கும்
      காதலரைப் பெற்றுவிடின் வெறியில் மூழ்கித்
தந்நிலைமை மறந்துமனம் மகிழ்வர் போலும்!
      தான்செய்வ தின்னதென உணரா திந்த
மின்னிடையும் தனைமறந்து களிப்பில் மூழ்கி
      மிதக்கின்றாள் திளைக்கின்றாள் என்னே விந்தை!
பன்னரிய வெற்றியினால் உலகம் காட்டும்
      பரிசிதுதான் போலு’மென வியந்தாள் தோழி.88


அருத்தி - ஆசை, மாடு - பக்கம், வடித்தாள் - ஒழுங்குசெய்தாள். பரிசு - இயல்பு,