பக்கம் எண் :

374கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 59

கனகனின் ஓலையைக் கண்ட கோளரி
மனமகிழ் வுறவே மலர்த்திப் படித்தனன்.

‘நாட்டின்பால் பற்றுடைய இளைஞர் ஏறே!
      நாவலத்தின் மானத்தைக் காப்ப தற்கு
வேட்டெழுந்த உன்திறத்தை நாடு போற்றும்;
      வெற்றியுடன் மீள்கஎன வாழ்த்து கின்றேன்;
கோட்டைஎழும் வெண்ணகரம், மூவகத்தின்
      கோட்டருகில் வடதிசையில் விளங்கல் காண்பாய்!
கூட்டமொடு சூழ்ந்ததனை முதலில் தாக்கிக்
      கோட்டையினை நின்வயமே ஆக்கிக் கொள்க!280

பின்னருனக் கெளிதாகும்; மூவ கத்தின்
      பிடியுனது கையகத்தே வந்து சேரும்;
நன்னரது வந்துவிடின் உலகில் எங்கும்
      நலம்விளையும்; நலிவுதரும் போரே யில்லை;
பன்னரிய இதுநினைந்தே மறவர் சூழப்
      படைத்தலைவர் இருவரையும் அனுப்பி யுள்ளேன்;
நின்னுடைய சொற்கேட்டுத் துணையாய் நிற்பர்;
      நிகரில்லாப் போர்த்திறத்தர்’எனுஞ் சொற் கண்டான்281


கோட்டருகில் - எல்லைப்பக்கத்தில்