376 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 61 வெண்ணகருட் படைபுகுந்த செய்தி கேட்ட வெண்கோடன் சினந்தெழுந்து பாய்ந்து வந்தான். பாய்புலிகள் நகருக்குட் புகுந்த காலைப் பார்த்தனர்வெண் கோட்டையினை; உடன்றெ ழுந்து போய்மதிலைத் தகர்க்கஎன ஓடி வந்தார்; பொன்றலர் தாம் உட்புகுந்த செய்தி கேட்டுக் காய்சினத்தன் வெண்கோடன் உருத்தெ ழுந்து கருதலரைப் பொருதலறச் செய்வேன் என்று பாய்புரவி மிசையேறிப் பாய்ந்து நாட்டுப் பற்றதனால் பற்றாரைப் பற்ற வந்தான்.284 பரியேறி வருவீரன் பகைமுன் னின்று ‘பற்றலரே! என்னுடன்போர் தனித்துச் செய்ய வருவீரோ? பொருதற்கு வல்ல ராயின் வருக’வெனத் தோள்தட்டி ஆர்ப்ப ரித்தான்; அரியேறிவ் வறைகூவல் கேட்டு நின்றே ‘அதிரவரும் மொழிபுகல்வோய்! யார்நீ? என்பால் சரியாகத் தனிநின்று பொரவல் லாயோ? தகுதுணிவும் பெறுதிஎனில் பொரவா’ வென்றான்.285 ‘இளமகனே! வெண்கோடன் எனும்பேர் கொள்வேன் இக்கோட்டைத் தலைவன்யான்; மாதர் தாமும் களமருவிப் போர்செய்யும் வீரங் கொண்ட கடிநகராம் வெண்ணகருள் வந்து நின்றே உளறுமொரு துணிவுனக்கு வந்த தேயோ? ஒருவரெனை இதுவரையும் அழைத்த தில்லை; வெளிறுடைய உன்னுடலும் தலையும் வேறாம்; வேலைஎடு! ஆவிவிட வாவா’ என்றான்.286
பொன்றலர், கருதலர், பற்றார்- பகைவர். பொர - போர்புரிய கடிநகர் - காவல் பொருந்திய நகரம். வெளிறு - வலியற்ற தன்மை. |