இயல் - 62 கோளரிக்கும் வெண்கோடன் தனக்கும் நேர்ந்த கொடும்போரில் வெண்கோடன் தோல்வி யுற்றான். வெண்கோடன் உரைத்தவெலாம் கேட்டு நின்ற வீரமகன் வேலெடுத்தான் நகைத்தெ ழுந்தான்; கண்மூடித் திறக்குமுனம் பாய்மா வேறிக் கறங்கெனவே சுழன்றுசுழன் றார்ப்ப ரித்தான்; நண்பாடும் பொழுதத்து நண்பர் போல நண்ணாரிவ் விருவருமே நகைத்து நின்று விண்ணாடும் மின்னொளிபோல் வேலை வீசி விளையாடிப் பொருதனர்தம் திறமே காட்டி.287 காலெடுத்துப் புரவிகளும் சுழலும் போது களமெங்கும் மேலெழுந்து புழுதி சூழ, வேலெடுத்து வாய்மடித்துக் கோடன் மார்பில் வீரமகன் குறிபார்த்து வீசி விட்டான் மேலுடுத்த வன்கவசம் வாய்பி ளக்க, விரியகலத் தவ்வீட்டி தைத்த ழுந்த, வாலுகத்துச் செங்குருதி சோர வீழ்ந்தான் வாய்வீரம் பலபேசி வந்த வீரன்.288 புரண்டுவிழும் வெண்கோடன் கவச மார்பில் பொற்கழலை வைத்தழுத்தி வாளை ஒச்சி, மருண்டவன்றன் கழுத்தரிய முயலுங் காலை மனம்மயங்கி முறுவலன்றன் தாள்கள் பற்றி ‘வெருண்டஎனை விட்டுவிடு, கொல்ல வேண்டா, வீரவுனை வேண்டுகிறேன்’ என்று கெஞ்ச, ‘இருண்டுவிடும் உன்வாழ்வென் றஞ்சி என்னை இரக்கின்றாய் ஆதலினால் இறக்க வேண்டா.289
கறங்கு - காற்றாடி. நண்பாடும்பொழுது - நட்புக்கொள்ளும் பொழுது, அகலம் - மார்பு. வாலுகத்து - வெண்மணலில். |