பக்கம் எண் :

வீரகாவியம்379

இயல் - 63

வெண்கோடன் சிறைப்பட்ட செய்தி கேட்டு
வீரமிகு தனியொருவன் பாய்ந்து வந்தான்.

அம்பாரும் புட்டிலொன்று தோளில் தூங்க
      ஆர்க்கின்ற சிலையொன்றை மலர்க்கை தாங்கத்
தெம்பாக ஓரிளைஞன் புரவி ஏறித்
      தேர்கவசம் மெய்ம்மறையப் பூண்டு, தன்னை
முன்பாக அடையாளம் அறியா வண்ணம்
      முகமூடி ஒன்றணிந்து, சினமே கொண்டு,
கொம்பூதி ஆர்ப்பரித்துப் போர்மேற் செல்லக்
      கோட்டையின்முன் தனியொருவன் வந்து நின்றான்.292

‘போர்தொடுக்க வந்துள்ளேன்; துணிவு கொண்ட
      புகல்மறவர் எவரேனும் தனிய ராக
நேர்தொடுக்க வல்லீரேல் வருக! இன்று
      நிகழ்போரில் கண்டிடுவோம் வெற்றி தோல்வி;
யார்தொடுக்க வருகின்றீர்? வாழ்வும் சாவும்
      எனுமிரண்டுள் தலைக்கொன்று பகிர்ந்து கொள்வோம்;
ஊர்கொடுத்து வாழ்வெதற்கு? போரில் என்றன்
      உயிர்கொடுத்தும் நகர்காப்பேன் வருக’என்றான்.293


அம்புஆரும்புட்டில் - அம்புக்கூடு, தூங்க - தொங்க, சிலை - வில், புகல் - மனச்செகுக்கு