பக்கம் எண் :

382கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

இயல் - 65

சாய்ந்த வீரன் தையலென் றறிந்து
போந்தவட் கறிவுரை புகன்றுசிறை செய்தான்.

சாய்ந்தவன்பால் அவ்விளவல் விரைந்து சென்று;
      தன்வாளால் முகத்திரையை விலக்கி விட்டான்;
ஓய்ந்தவளோர் பெண்மகளே என்று கண்டான்;
      ஒளிமுகத்தில் கயல்விழிகள் பிறழக் கண்டான்;
சாய்ந்தளகம் தோள்மிசையே புரளக் கண்டான்;
      தாங்கரிய திகைப்புடனே வியப்புங் கொண்டான்;
காய்ந்தமரில் பெண்ணுடனோ பொருதோம் என்று
      கைபிசைந்து தனதுமனம் வருந்தி நின்றான்.298

‘மூவகத்துப் பாவையரும் படையிற் சேர்ந்து
      முனைத்தெழுபோர் தொடுக்குவரேல் ஆண்பால் என்போர்
சாவதற்கும் அஞ்சாராய்ப் புரியும் வீரம்
      சாற்றுதற்கும் எளிதாமோ? விந்தை! விந்தை!
ஏவகத்து விற்போரும் மற்றைப் போரும்
      இவளின்மேற் பன்மடங்கு விஞ்சி நிற்பர்;
நாவகத்துச் சொல்லெல்லாம் கூட்டிச் சேர்த்து
      நவின்றாலும் இவள்திறத்தை நவிலப் போமோ?’299

எனவுளத்துச் சிந்திப்போன் அவளை நோக்கி,
      ‘இயம்பரிய வீரத்தின் எழில ணங்கே!
தினவெடுத்த திண்டோளன் என்முன் தோற்றாய்;
      சிறைசெய்தேன்; என்னையினித் தப்பிச் செல்லல்
கனவகத்தும் இயலாது; போரை வேட்டுக்
      களமுற்றார் சிறையுறுதல் சமரிற் சாதல்
எனுமிவற்றுள் ஒன்றுறுதி; அறிவாய் நீயும்;
      ஏன்வந்தாய் ஆய்வின்றி முனைய கத்தே?300


அளகம் - கூந்தல், காய்ந்து - கோபித்து, ஏ அகத்து - அம்பைத் தன்னகத்தே கொண்ட.