பக்கம் எண் :

112கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

சொல்லுரைசே னாவரையம் கற்ப தற்கும்
       சொல்லுதற்கும் அரிதென்று வல்லார் சொல்வர்;
வல்லவரந் நல்லுரையை வடித்துக் காட்டி
       மாணவர்க்கு விளக்குங்கால், 1மறைந்து நின்று
பல்லமயம் அவ்விளக்கங் கேட்டுக் கேட்டுப்
       பாராட்டி ரா.ராக வையங் காரும்
சொல்லியது கேட்டுள்ளோம்; வசிட்டன் வாயாற்
       புகழ்ந்ததற்பின் சொல்லுதற்கும் உண்டோ சொற்கள்? 8

இலக்கணத்தை உலைக்களமென் றிரும்பு லக்கை
       என்றெல்லாம் எள்ளிநகை செய்வா ருண்டு;
விலைக்கரும்பைப் பிழிந்தெடுக்கும் ஆலை என்றும்
       விளையாட்டு மொழிபேசும் சிலரும் உள்ளார்
உளக்கருத்தைச் சொலுமுரிமை எவர்க்கும் உண்டால்
       ஓரளவே தெரிந்தவர்தாம் உளற லாமோ?
நிலைக்கிரங்கி நிற்பதலால் வேறென் செய்வோம்?
       நிகழ்காலம் இகழ்காலம் ஆயிற் றந்தோ! 9

இவரிடத்துக் கற்றவர்தாம் இலக்க ணத்தை
       எள்ளிநகை செய்ததையாங் கண்ட தில்லை;
எவரிடத்துக் கேட்டாலும் வியந்து நின்றே
       ஏற்றமுற மொழிவதைத்தான் கேட்ட துண்டு;
தவறிழைக்கத் துணிவாரோ தமிழை ஆய்ந்தோர்?
       தமிழிவர்பாற் பயில்கின்ற பேறு பெற்றோர்
உவகைக்கோர் எல்லையில்லை; அரிய ஒன்றிங்
       குற்றதுபோல் அவருளத்தில் நிறைவு காண்பார். 10

மாணவன்போல் ஆசான்றன் திறத்தை யெல்லாம்
       அளந்தறிய வல்லவொரு கருவி இல்லை
காணுமிவர் ஆற்றலுக்குச் சான்று காட்டக்
       கற்றவர்தாம்1 தருமொழியில் ஒன்று போதும்;
பேணிஅவர் தருமொழிகள், பாடஞ் சொல்லும்
       பெருமையினை நன்கெடுத்து விளக்கிக் காட்டும்;
பூணுமுயர் அன்புணர்த்தும்; அவர்தம் வாழ்வு
       பொலிவுபெற வழியுரைத்த அழகுங் காட்டும். 11


1.பண்டித மணி வகுப்பறையிற்பாடஞ் சொல்லுங்கால் இரா,இராகவையங்கார் பக்கத்தறையில் மறைந்திருந்து கேட்டு மகிழ்ந்து பாராட்டியதுண்டு. 1.மாணவர் (இவரிடம் கற்றவர்)