எதுவெனினும் இதுவரையில் வெற்றி ஒன்றே ஏந்திவரும் அரசரிதை விட்டா ரல்லர் இதைஇதனால் இவன்முடிக்கும் என்ற வண்ணம் இயற்றுவதிற் கைவந்த கலைஞ ரன்றோ? கதிரவரின் உறவினர்யார்? எவர்தம் சொல்லுக் கிவர்பணிவார்? என்றாய்ந்து காண வல்ல 1மதுகையினால் தாமுயன்று வெற்றி கண்டார் மணிப்புலவர் அதன்பின்னர் ஒப்புக் கொண்டார். 4 மீனாட்சி கல்லூரி என்று தோன்றி மேல்வளர்ந்து பல்கலைசேர் கழக மாகித் தானாட்சி செய்துவரும் நிறுவ னத்தில் தமிழாட்சி செய்வதற்கு மனமி சைந்தார் மீனாட்சி பங்காளர்;2 ஏற்ற பின்னர் மேலாட்சி ஒன்றில்லை என்று போற்றத் தேனாட்சி செய்கின்ற தமிழ்வ ளர்த்தார் திசையெல்லாம் பேராட்சி செய்யக் கண்டார். 5 குலனுடையார் அருளுடையார் தெய்வம் போற்றுங் கொள்கையிலும் மனமுடையார் மேன்மை கொண்டார் கலைபயிலும் தெளிவுடையார் விரும்பிக் கேட்கக் கட்டுரைக்குந் திறனுடையார் நிறைகோ லன்னார் நிலமனையார் மலையனையார் மலரும் ஒப்பார் நிகரில்லா ஆள்வினையும் இயல்பான் வந்த உலகியலோ டுயர்குணமும் ஒருங்கு பெற்றார் ஒருகுறையும் இல்லாத ஆசான் ஆனார். 6 காலமறிந் திடனறிந்து நூலெ டுத்துக் கற்பிக்கச் சிறந்துழியுந் தேர்ந்தி ருந்து நீலமணி மிடற்றானை நெஞ்சால் வாழ்த்தி நிரந்தினிது சொலும்பொருளைப் படித்துப் பார்த்து மேலுமதை உளத்தமைத்து முகம லர்ந்து விரையாது வெகுளாது விரும்பி நின்று பாலமுதம் ஊட்டுதல்போல் கொள்வோன் கொள்ளும் பாங்கறிந்தே உளங்கொள்ளப் பாடஞ் சொல்வார். 7
1.வலிமையால். 2.மீனாட்சி ஆச்சியின் கணவர் கதிரேசர். |