பக்கம் எண் :

110கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

10
பேராசிரியக் காதை

மடைகாட்டும் வெள்ளமென வந்த செல்வம்
       மற்றெதற்கோ செலவழித்துப் பயின்ற நாட்டில்
நடைகாட்டுங் கல்விதரக் கழகம் காண
       நற்றமிழ்க்குக் கோவில்செய முந்தி முந்தி
நடைபோட்டு வந்தமகன் அரசர் என்று
       நாடெல்லாம் போற்றுமகன் எதையும் தூக்கி
எடைபோட்டுப் பார்ப்பதிலே வல்ல மைந்தன்
       எழில்மிகுமண் ணாமலையார் போல்வார் யாரே? 1

காடாய வேட்களத்தைக் கல்லும் முள்ளும்
       கலந்திருந்த நிலப்பரப்பைச் சீர்தி ருத்தி
நாடாக உருவாக்கித் தம்பேர் தாங்கும்
       நகராக்கிப் பல்கலைதேர் கழக மாக்கி
ஏடாள வல்லார்யார் என்று தேடி
       இணையிலரைத் துறைதோறும் ஆசா னாக்கிப்
பீடாள வந்தவரைத் தமிழர் கண்ட
       பெருநிதியை என்சொல்லி வாழ்த்து வோமே. 2

சங்கத்துத் தமிழ்பரப்பிப் புகழ்ப ரப்பித்
       தனியொளிபெற் றிலங்குமணி புகழைக் கேட்டுத்
தங்கத்தில் மணிவைத்துப் பார்க்க வல்ல
       தனவணிக மரபரசர் தாம மைத்த
சங்கத்தில் நம்மணியை வைத்துப் பார்க்கத்
       தனியார்வம் மிக்கவராய் அணுகிப் பார்த்தார்
அங்குற்றுப் பணிசெய்ய விரும்பா ராகி
       அதற்கிவர்தாம் இசைவுதர மறுத்து விட்டார். 3