நிலத்தடியில் அமைந்திருக்கும் பொன்னும் மற்றும் நீர்க்கடலில் கிடக்கின்ற துகிரும் முத்தும் மலைப்புலத்தில் விளைந்துயர்ந்த மணியுங் கூடி மாநிலத்தார் அணிகலன்கள் அமைக்குங் காலை 1கலத்தினிடை ஒருசேரத் தோன்றியாங்குக் கலைபலவுங் கற்றுணர்ந்த சான்றோர் சேய்மை நிலத்தவர்தாம் என்றாலுங் கல்வி கேள்வி நிறைந்தொளிரும் மணியின்பாற் கலந்தி ருந்தார். 24 கூடெடுத்த பயன்முழுதுந் துய்த்த நூலோர்; குழந்தைமுதல் பெரியர்வரை அறியும் மேலோர்; கேடுடுத்த கடல்கோளும் கறையான் வாயும் கெடுமதியர் சூழ்ச்சிகளும் தப்பி நின்று ஏடெடுத்து நமதுதமிழ் நூல்கள் வாழ இனிதளித்தோர் பணிபுரிந்தோர் சாமி நாதப் பீடுடுத்த பெருங்கிழவர்; அவர்தம் நட்பும் பெரும்புலமைக் கிழவரிவர் பூண்டி ருந்தார். 25
1.அணிகலனில் |