பக்கம் எண் :

இளம்பெருவழுதி175

தமிழ்வாழ்த்து

ஆடகக் குழைகள் ஆட
       அடியினிற் சிலம்பும் ஆடப்
பாடமை வளைகள் ஆடப்
       பையமே கலையும் ஆடக்
கூடெழில் மணிகள் ஆடக்
       குலவியே எனது நெஞ்சுள்
நாடகம் ஆடும் நங்காய்
       நற்றமி ழன்னாய் வாழ்க

முதுமைவந் துற்ற போதும்
       முழுவலி யற்ற போதும்
கதுவுபல் பிணிகள் பற்றக்
       கலங்கியே நின்ற போதும்
எதுதுயர் நேர்ந்த போதும்
       எவர்பழி செய்த போதும்
புதுமையோ டிளமை பூண்டு
       பொலிவுடன் ஆடு கின்றேன்

உற்றுளே கலந்து நீயென்
       உயிருடன் உறைத லாலே
கற்றவன் போல யானும்
       களிநடம் ஆடு கின்றேன்
குற்றமென் றுறுமேல் நின்றன்
       குறையலால் என்பா லில்லை
சற்று நீ விழித்து நிற்பின்
       சாருமோ குற்ற மிங்கே?

-முடியரசன்