பக்கம் எண் :

190கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

வழுதி:எளிய மெல்லொலி இன்னிசை நயத்தே
அளிய என்னுளம் அவாவிற் றைய;
நாகனார்:இனிய போலவும் எளிய போலவும்
அணுகு பவைதாம் அடிமை கொள்ளும்
நண்ணுவ எவையும் நமதாக் கோடல்
உள்ளவை மறத்தற் கொருவழி போலும்;
குழலி:வந்து புகூஉம் வம்பலர் இசையில்
உந்தவாக் கோடல் ஒருகுறை கொல்லோ?
நாகனார்:வேற்றவர் இசையை விழைவது தவறிலை
ஊற்றமும் ஏற்றமும் உவந்ததற் கீந்து
மனத்தை யிழந்து மயக்குறிற் பெரும்பிழை;
இனத்தை மொழியை எளிதில் மறந்து
வருவிருந் தோம்பும் வாழ்வினர் தமிழர்;
பின்னை வருவன பேணுங் காலைத்
தன்னை யிழவாத் தகைமை வேண்டும்;
புகூஉம் ஒன்றதுள் இரண்டறக் கலத்தல்
நகூஉம் நிலையொடு நலிவும் நல்கும்;
வழுதி:: (வாடிய முகத்துடன்)
உரிய மறத்தல் வருவ புரத்தல்
இரிய மனத்துள் உறுதி கொள்ளுவென்;
நாகனார்:நன்று நன்று; நாளை ஆள்பவர்
நன்றுந் தீதும் நவையறத் தெளிதல்
உரிமை காத்தற் குறுதுணை யன்றோ?
  எப்பொருள் கேட்பினும் எவர்வாய்க் கேட்பினும்
அப்பொருட் டன்மை எத்தக வாயினும்
எண்ணித் துணிக இளையோய்; அஃதே
பண்ணத் தகுநற் பகுத்தறி வென்ப;
(வழுதி தலையசைத்து ஓம்புதல் காட்ட)
குழவி:மொழிநலங் காக்கும் முந்தையர் இலக்கண
எழிலும் இயல்பும் இயம்புதிர் இனிதே;