பக்கம் எண் :

இளம்பெருவழுதி189

வழுதி:தக்காங் குரைத்தீர் தாய்மொழி காக்கத்
தக்க நெறியும் தந்தருள் புரிக;
நாகனார்:புகுவ தடுத்தல் புதுவ படைத்தல்
தகுமிரு வகைத்தே தாய்மொழி காத்தல்;
குழலி:புகுவ தடுத்தலென் றொன்று புகன்றீர்
அஃதும் தெள்ளிதின் அறிய அவாவினம்;
நாகனார்:அயன்மொழிக் காட்பட் டம்மொழிச் சொற்கள்
நயந்து கலந்து நடையிற் புகவிடல்,
பிறமொழி விழைந்து பெறுமொழி மறந்து
வருமொழிக் காளுமை தருதல் எனுமிவை
புகாஅது காத்தல் புகுவ தடுத்தலாம்;
குழலி:தகாஅ அடிமைத் தனத்தர் செயலைச்
செகாஅது விடேஎம் செந்தமிழ் காப்போம்;
நாகனார்:தாய்க்குலம் விழித்தெழின் தாயகஞ் செழிக்கும்
தாய்மொழி ஆல்போல் தழைக்கும் கொழிக்கும்
உயர்மொழி தனிமொழி செம்மொழி நம்மொழி
அம்மொழி வளர்க்க அரிவையர் முந்துறின்
எம்மிற் சிறந்தோர் எவருளர் அம்ம;
குழலி:வருமொழிக் காளுமை தருதல் தகாதென்
றொருமொழி புகன்றீர் திருமகன் வழுதி
புகூஉம் யவனர் தரூஉம் இசையில்
மிகூஉம் ஆர்வம் மீதூர்ந் துளரால்;
வழுதி:பிறர்குறை தூற்றும் பெற்றியர் பெண்டிர்,
குறையெனக் கூறுங் குறியினள் இவளே;
குழலி:புகல்வாய் மொழிதான் புனைவுரை யாமெனிற்
புகல்வாய் ஆணை புலவர் திருமுன்;
நாகனார்::(வழுதியை நோக்கி நகைத்து)
அரவம் உறைகால் அரவே அறியும்
கரவு தவிர்த்துக் கழறுதி வாய்மை;