பக்கம் எண் :

188கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

குழலி::(வழுதியைக் குறும்பாகப் பார்த்து)
குறுமனங் கொண்டோர் கோதையர் உயர்வை
வெருவின ராகி விழைதல் செய்யார்;
வழுதி:வெருவுவா ரீங்கிலர் விழைவா ரீண்டுளர்;
நாகனார்:(இருவரையும் அமைதிப்படுத்தக் கையமர்த்தி)
தண்ணிய தென்றற்குப் பெண்டிர் விலக்கோ?
மண்ணும் ஒளியும் மழையும் பொதுமை
எண்ணும் எழுத்தும் இருபாற் பொதுமை;
கண்க ளிரண்டுள் காண்டற் குரித்தென
ஒன்றுவிட் டொன்றை உரைப்பா ருளரோ?
செவிக விரண்டுள் கேட்டற் குரிய
செவியீ தென்று செப்புநர் உண்டோ?
எவருங் கல்விக் குரிய ராவர்;
இவர்தாம் அவர்தாங் கற்றற் குரியரென்
றெவர்தாம் வரையறை இயற்றற் குரியர்?
குழலி:எளிதில் வாரா இலக்கணப் பயிற்சி
எளியம் எமக்கேன்? . . . . . . . .
நாகனார்:. . . . . . . . என்மொழி புகன்றனை?
பொருள்கள் காணக் கருவிழி சாலும்
இருபால் இமைகள் இருப்ப தெதற்கு?
பெருகிய வையைக் கிருபால் மேவும்
கரைகள் எதற்கு? காத்தற் கன்றோ?
வழுவொரீஇ, மொழியை வழாநிலை யாக்கி
எழிலுறக் காப்ப திலக்கண மாகும்;
முயலா திருப்பின் எளிதில் வருமோ?
முயலின் வாரா உறுதிகள் உளவோ?
அதுதான்
அரிதென் றசைஇ யிருப்பார்க் காணின்
மொழியெனும் நல்லாள் மூடரை நகுவள்;