| நாகனார் | : | மாந்தர் உயர்வும் மானமும் மனத்துள் ஏத்திப் பொதுநலம் எண்ணி முயலுநர், இகழ்ச்சி புகழ்ச்சியென் றிரண்டுங் கொள்ளார்; |
| பாண்டியன் | : | நன்றி புலவீர் நம்மகன் வழுதி மன்றல் குறித்து வரையறை செயாது பிறபிற பேசினம்; எழிலி குழலி இருவருள் எவரைத் திருமண மகளாக் கொள்ளுதும் அதனைக் கூறுக . . . . |
| நாகனார் | : | . . . . . . . . . . . . . . . வேந்தே மருமகள் யாரென மாறன் தேவி திருவுள மன்றோ தெளிதல் வேண்டும்; |
| மாதேவி | : | எழிலி குழலி எவரே யாகினும் வழுதியின் மனத்தைத் தெளிவுறத் தெரிந்து செயல்மேற் கொளலே சீர்மைத் தாகும்; அயலவர் கருத்தை அறிந்து பயனென்? |
| பாண்டி | : | கயல்விழித் தேவி கழறிய துண்மை அவன்றன் கருத்தை அறிய வேண்டின் புலவர் தாமே பொருத்தம் உடையர்; |
| நாகனார் | : | தலைமகன் உளத்தின் தன்மை யறிந்து நாளை வருதும் நலமே பொலிக (புலவர்க்குப் பின் அரசனும் அரசியும் தொடர) ஊழியல் வழுவா ஒண்டொடி யாரொடும் ஏழடி எம்பின் வந்தனிர் இனிநீர் ஈண்டிவண் நிற்க ஏகுதும் யாமே. |