பக்கம் எண் :

ஊன்றுகோல்37

இலக்கியப் பண்பா டின்னும்
       இருக்கிற தென்று கூறித்
துலக்கிடச் செட்டி நாடே
       துணையெனச் சொல்ல லாகும்
நலத்தகும் அந்நாட் டுள்ள
       நமதுபூங் குன்றுக் கின்று
சொலப்படும் பெயரோ நல்லோர்
       சூழ்மகி பாலன் பட்டி 4

பொருளினால் மிகுந்த மேலோர்
       புலமையிற் சிறந்த நூலோர்
அருளினால் இரங்கும் நல்லோர்
       அன்புடன் பண்பும் உள்ளோர்
குறளினால் உரைத்த கொள்கை
       குறிக்கொளும் இல்ல றத்தார்
மருளினால் திரியா மாந்தர்
       மதியினார் வாழும் நல்லூர் 5

திரைவழி கடந்து சென்று
       திறமையால் ஈட்டு வாரும்
1செறுவழி உழுது செல்வம்
       சேர்த்ததை உதவு வாரும்
தருவழி யறிந்து செல்வம்
       தக்கவர்க் கருளு வாரும்
ஒருவழி அறமே யாக
       உலவிடும் நல்லூர் அவ்வூர் 6

இளஞ்சிறார் பயிலும் பள்ளி
       இருப்பதங் கொன்றே ஒன்று
புழங்குவார் இருவர் மூவர்
       போய்வரும் தெருவி ரண்டு
வழங்கிடும் கடைகள் மூன்று
       வடிவினிற் சிறிய வாகும்
அளவுவார் மக்க ளீட்டம்
       ஆயிரத் தைந்நூ றாகும் 7


1.வயல்.