பக்கம் எண் :

ஊன்றுகோல்39

நிழல்களே சாயும் அன்றி
       நிலையினிற் சாயா நெஞ்சர்
கழனியில் வரம்பு செய்வர்
       கற்பதில் வரம்பு செய்யார்
உழவினிற் களைகள் தோன்றும்
       உறவினிற் களைகள் காணார்
அழல்களே சுடுவ தன்றி
       அவர்மொழி சுடுவ தில்லை 12

உழுகலங் குழிகள் செய்யும்;
       ஒருவர்மற் றொருவர்க் காகக்
குழியகழ் வினைகள் செய்யார்
       கூடியே வாழ்ந்து நிற்பர்,
புழுங்குதல் அரிசிக் கன்றிப்
       புந்தியில் அதனைக் கொள்ளார்
பழகுதற் கினியர் அந்தப்
       பகுதியில் வாழும் மாந்தர் 13

குலவுவார் நடந்து செல்லக்
       குறுவழி கொண்ட தேனும்
உலகுளார் நடந்து செல்ல
       உயர்வழி பலவுஞ் சொல்லி
அலகிலாப் பெருமை பூண்ட
       அரும்பெரும் 1பாடல் தந்து
நிலமெலாம் புகழ்வி ரித்து
       நிலவுவ தவ்வூர் ஆகும் 14

சிலவிதை தூவி விட்டுச்
       செந்நெலாற் களஞ்சி யத்தைக்
குலவுற நிறைத்துக் காட்டுங்
       குடியினர் வாழுஞ் சிற்றூர்
உலகினர் வியக்கும் 2பாடல்
       ஒன்றினைக் கொடுத்து விட்டுப்
பலபல பாடல் கொண்டு
       பல்கிடுஞ் சிறப்பிற் றாகும் 15


2. ‘யாதும் ஊரே’