பக்கம் எண் :

40கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

பெருமைசேர் பூங்குன் றத்துப்
       பீடுயர் வணிகர் தம்முள்
கருணைவாழ் மனத்தர் முத்துக்
       கருப்பனென் றொருபேர் தாங்கும்
திருவினார் துணைவி யான
       சிவப்பியார் மணிவ யிற்றுள்
கருவிலே உருவ மான
       கதிரவன் எழுந்தான் அம்மா! 16

பெற்றவர் உள்ளம் பொங்கப்
       பிறந்தநல் வீடும் ஊரும்
பெற்றொளி விளங்கப் பண்டை
       இலக்கியம் பிறங்கித் தோன்றக்
கற்றவர் நெஞ்ச மெல்லாம்
       கதிர்விடத் தமிழ வானில்
உற்றெழு கதிரைக் கண்டாள்
       உவந்தனள் தமிழ்த்தாய் அங்கே 17

விசுபுரட் டாசித் திங்கள்
       வெள்ளியாம் இரண்டாம் நாளில்
பசுபதிக் குரிய தென்று
       பகருமா திரைநன் னாளில்
பசுமையிற் பொலியும் அந்தப்
       பதியினர் பெற்றோர் மற்றோர்
நசைமிகு தமிழ்த்தாய் செய்த
       நற்றவப் பயனைக் கண்டார் 18

கதிரொளி தரும்பிள் ளைக்குக்
       கதிரேசன் எனும்பே ரிட்டார்
மதியொளி முகத்திற் கண்டு
       மகிழ்ந்தனர் உற்றார் பெற்றார்
எதிரென எவரு மில்லா
       இளம்பிள்ளை இரண்டாண் டாகப்
புதுமெரு குடனே நாளும்
       பொலிவுற வளர்ந்த தங்கே 19