பக்கம் எண் :

ஊன்றுகோல்59

எளிதாகச் சென்றுவரும் வாய்ப்பே யின்றி
       இலங்கிடுமவ் வூருக்கு விழவு காண
வெளியூரில் வாழ்பவர்கள் சகடு கட்டி
       விழைந்தோடி வந்தங்குக் குழுமு வார்கள்;
ஒளிகாலும் மணியெருதுக் கூட்டம் உண்ண
       உருவாகும் முன்கூட்டி வைக்கோற் குன்றம்;
அளியாளர் ஒவ்வொன்றும் எண்ணி எண்ணி
       அழகுறவே விழாநடத்தி வந்தார்அன்று. 24

நூலறிவும் நுண்மதியும் மாட்சி யுற்ற
       நுழைபுலமும் நிறைசான்றோர் விழாவில் வந்து
வாலறிவுத் திறங்காட்டி உறைவர் பன்னாள்
       வளர்பயிர்க்கு மழைபோல வாய்த்த தங்கே,
காலமுணர் கதிரேசர் புலவர் தம்பால்
       கலந்துசவி மனமகிழ்ந்து செழித்து நின்றார்,
சாலவுணர் இவராலே சபையும், அந்தச்
       சபையாலே இவருமுடன் வளரக் கண்டோம். 25

தாங்கற்ற வடமொழியிற் சிலநூல் தேர்ந்து
       சபையுதவத் தமிழ்மொழியிற் பெயர்த்த ளித்தார்;
ஈங்குற்ற அவற்றையெலாம் வெளியீ டாக்கி
       எம்சபைதான் உலகுக்குக் கொடுத்த தன்று,
வீங்குபுகழ் யாங்கணுமே கதிரே சர்க்கு
       விரைந்ததனற் பரவியது; சபையின் பேரும்
ஓங்கியது; நாளுக்கு நாள்ம லர்ந்தே
       ஒன்றற்கொன் றுதவியென வளரக் கண்டோம் 26

பதினாறாம் ஆண்டுவிழா சபைந டத்தும்
       பருவத்தில் விரிவுரைகள் ஆற்ற வந்த
மதிவாணர் பலர்கூடிச் சிந்தித் தாய்ந்து
       மகிபாலன் பட்டியெனும் பூங்குன் றத்துக்
கதிரேசர் சபைவளர ஆற்றுந் தொண்டும்
       கற்றுணர்ந்த நற்புலமைப் பெருக்குங் கண்டு
பதிவான பெயராகி விளங்கும் வண்ணம்
       பண்டிதமா மணியென்னும் பட்டம் தந்தார் 27