பக்கம் எண் :

60கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8

பலசிறப்புப் பெயரிவர்க்குக் கிடைத்த பின்பும்
       பண்டிதர்க்குள் மணியென்னும் பட்டம் மட்டும்
உலகினர்க்குத் தெரிதருமா றுயர்த்திக் காட்ட
       ஒளிநல்கும் மணியாகித் தமிழ்நா டெங்கும்
ஒலியெழுப்பும் மணியாகி ஓங்கி நின்றார்;
       உவந்தளித்த விருதுக்கு மதிப்பும் தந்தார்;
புலமைக்குக் கிடைத்தபெயர் நிலைக்கும் வண்ணம்
       போற்றியதைக் காத்தோம்பித் துலக்கிக் கொண்டார். 28

தனியரசாய்த் தமிழரசாய் விளங்கி வந்த
       தகவுடைய 1புதுக்கோட்டை மன்னர் தம்மை
இனியதமிழ்க் கல்லூரி தொடங்க வேண்டி
       எடுத்துரைத்தார், கல்விதருங் கூட மெல்லாம்
இனியுரிமை தமிழுக்குத் தருதல் வேண்டும்
       வடமொழியை எடுத்தியம்பும் நிலைய மெங்கும்
கனிதமிழைக் கற்பிக்க வேண்டும் என்று
       வடமொழியுங் கற்றவர்தாம் சாற்றி வந்தார் 29

புலமிக்க கதிரேசர் தாய்மொ ழிக்குப்
       புரிந்துவருந் தொண்டெல்லாம் சபையார் கண்டு
நலமிக்க அப்பணிக்குச் சிறப்புச் செய்ய
       நாட்டமிகக் கொண்டவராய்ச் செட்டி நாட்டு
வளமிக்க மன்னரண்ணா மலையைக் கொண்டு
       மணிப்புலவர் படமொன்றைத் திறந்து வைத்தார்;
தலைமைக்குத் தகுமணியார் நன்றி சொல்லிச்
       ‘சபைக்குமுதல் மாணாக்கன் நான்தான்’ என்றார் 30

எமக்கெல்லாந் தமிழமுதை ஊட்டி யூட்டி
       எமதறிவை வளர்த்துநலந் தந்த தாயாம்
இமைக்குநிகர் எனநின்று தமிழைக் காக்கும்
       இயல்புடைய நற்சபைக்கோர் ஊன்று கோலாய்த்
தமக்குநிகர் இலாமணியார் விளங்கி நிற்கத்
       தழைத்துவரும் அருள்மனத்தர் பழநி யப்பர்
அமைத்தசபை இவருக்கோர் ஊன்று கோலாய்
       அமைந்திருக்கத் தமிழ்பரவிச் செழிக்கக் கண்டோம் 31


1.புதுக்கோட்டை மன்னர் அன்று வடமொழிக்கு ஆக்கந் தந்து வந்தார்.