உள்ளத்துள் உணர்வூட்டிப் பற்றுண் டாக்கி, உண்மைபெறும் பத்தியுடன் தொண்டு செய்ய மெள்ளத்தன் னாளாக்கிப், பாடல் வல்ல மேலவர்தம் கூட்டத்துள் ஒருவ னாக்கி, அள்ளித்தன் அருளெல்லாம் என்மேற் பெய்தாள் அழியாத வரமளித்தாள் தமிழ்த்தாய்; அந்தத் தள்ளைக்கு நானடிமை யான திந்தச் சன்மார்க்க சபையென்னுங் கோவி லிற்றான் 32 நலந்தந்த சங்கரரும் 1ஆட்டு வித்த நடேசருமென் தெய்வங்கள், நாளும் நாளும் வலம் வந்தே அருள்பெற்ற கோவி லுக்குள் மல்லிங்க சாமியொரு சாமி, எற்குக் குலந்தந்த தமிழ்தந்த முத்து சாமி கும்பிட்டு நான்மகிழ்ந்து நத்துஞ் சாமி; உளம்தந்து பாருலகின் இயல்புங் காட்டி உய்வித்த செல்லப்பர் மற்றோர் தெய்வம் 33 கதிர்மணிபாற் கற்றுணர்ந்த தலைமா ணாக்கர் கான்முளையாய் அவர்க்குப்பின் விளக்குஞ் செம்மல் புதுமுறையாற் றமிழாயும் புலமை யாளர் போதுமெனும் மனங்கொண்டு வாழும் நல்லர் இதுசரியென் றவர்மனத்திற் கொள்வ ராயின் எப்பொருட்டும் பிடித்தபிடி விடாத நெஞ்சர் முதுபுலவர் ஏற்றிருந்த சபைப்பொ றுப்பை முற்றுணர்ந்த மாணிக்கம் 2ஏற்றுக் கொண்டார் 34 பொருட்டுறையில் சபைதளரும் நிலைய றிந்து பொறுப்பேற்ற மாணிக்கம் ‘கல்விக் கீயும் அருட்கொடையோர் இவ்வுலகில் இன்று முள்ளார் ஆதலினால் திரட்டுதும்யாம்’ எனத்து ணிந்து மருட்கடலுங் கடந்துபொருள் தொகுத்து வந்து வளர்க்கின்றார் மாணிக்கத் தூணாய் நின்று; திருச்சபையும் சீனிதுணை 3யாகி நிற்கத் திருக்குறள்போல் தன்னிறைவாற் பொலிதல் கண்டோம் 35
1.க.சங்கரநாராயணப்பிள்ளை, நடேசஐயர், மல்லிங்க சாமி, முத்துசாமிப்புலவர், வீர.செல்லப்பனார் இவர்கள் ஆசிரியர்கள். 2துணைவேந்தர் வ.சுப.மா. 3பழநியப்பர் பெயரர் சீனிவாசன் |