பக்கம் எண் :

ஊன்றுகோல்69

5
நெறியுணர் காதை

போராடிச் செங்கதிரோன் தோன்று முன்னர்ப்
       புலர்காலைப் பொழுதத்துக் கடமை யாற்றி,
நீராடி வெள்ளியமெல் லாடை பூண்டு,
       1நீறாடி மலரடியை நினைந்து, நெற்றி
நீறாடி மெய்யெல்லாம் பொலிந்தி ருக்க,
       நிறைமொழிகள் சிலசொல்லி வணங்கிப் பின்னர்
யாரோடும் உரையாடல் முதலாம் செய்கை
       யாவையுமே செய்துவரல் அவர்வ ழக்கம் 1

தேவாரம் ஓதுபவர்க் காணின் மூவர்
       திருமுறையுள் அப்பர்தரும் ‘மாசில்வீணை’
நாவாரப் பாடுகவே பாடு கென்று
       நயந்துரைப்பார், அப்பாடல் இசைக்குங் காலை
மீவானில் வெண்மதியம் ஊர்ந்து செல்ல
       வேனிலிளம் பருவத்துத் தென்றல் வீசப்
பூவாரும் பொய்கையினுட் குடைந்து வந்த
       புத்துணர்வு கொண்டவர்போல் திளைத்தி ருப்பார் 2

சமயத்தை நன்குணர்ந்து திளைத்துத் தோய்ந்து
       தளராத செம்பொருளைக் கண்ட சைவர்;
உமைநத்தும் இறைவனடி மலரை என்றும்
       ஒருமையுடன் நினைந்துருகும் தூய நெஞ்சர்;
தமைமுற்றித் துயரங்கள் சூழ்ந்த போதும்
       தண்புனல்சேர் சடையான்பால் முறையிட் டாங்கண்
சுமைமுற்றுந் தவிர்ந்ததுபோல் இன்பங் காண்பார்,
       சுடர்மணியார் மெய்ச்சமய நெறியில் நின்றார் 3


1.திருநீறுபூசும் சிவன்.