பக்கம் எண் :

ஊன்றுகோல்87

8
சொல்வல்ல காதை

இலக்கியங்கள் பயிலாமல், இலக்க ணத்தின்
       இயல்பொன்றும் அறியாமல், நுனிப்புல் மேய்ந்து
சொலக்கருதும் ஒருபொருளைச் சிந்தித் தாய்ந்து
       சொலுமுறையாற் சொல்லாமல், முழக்க மிட்டுக்
கலக்கிவரும் பேச்சாளர் இற்றை நாளில்
       கணக்கிலராய்ப் பெருகிவரல் காணு கின்றோம்;
இலக்கவர்க்குப் பொருள்வருவாய் ஒன்றே யன்றி
       இலக்கியத்தின் வளர்ச்சியன்று; யாது செய்வோம்? 1

பழுதறநூல் பயில்வார்பின் அதனுள் தோய்ந்து
       பயன்பெறுவார் இன்புறுவார் சிந்தித் தாய்ந்து
முழுமதியாற் பகுத்துணர்ந்து முடிபு காண்பார்
       மொழியுங்கால் நிரல்படுத்தி அவையில் நின்று
வழுவகல நன்மொழியாற் கேட்போர் நெஞ்சம்
       மகிழ்ந்துகொள எடுத்துரைப்பார் அற்றை நாளில்;
தொழுதகையார் பெறுமின்பம் பிறரும் பெற்றுத்
       துய்ப்பதையே காமுறுதல் தொன்மைக் கொள்கை. 2

தென்மொழியும் வடமொழியும் தேர்ந்த நெஞ்சர்;
       தெளிவுபெற இருமொழியின் நூல்க ளெல்லாம்
அன்புறவே கற்றுணர்ந்து சுவைக்குஞ் செல்வர்;
       ஆய்ந்தறியும் கூர்மதியர்; தெளிந்த சொல்லர்;
தென்பொதியத் தென்றலென மெல்லப் பேசித்
       தெரிந்தவையின் நிலைக்கேற்பக் கொள்ளும் வண்ணம்
சின்மொழியால் விளக்கிடுவார் மகிழவைப்பார்
       செப்பரிய திறத்ததுவாம் மணியார் பேச்சு! 3