190 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9 |
அவருக்குச் சவரிமுத்துப் பிள்ளை என்னும் பெயருடைய பேரர் ஒருவர் இருந்தார். கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மரிய சவரியாப் பிள்ளை என்ற மருத்துவர் ஒருவர் குளத்தூருக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ஆரோக்கிய மரியம்மாள் என்ற திருமகளார் இருந்தார். இவ்வம்மையாருக்கும் சவரிமுத்துப் பிள்ளைக்கும் சிறப்புடன் திருமணம் நடந்தேறியது. இல்லற வாழ்வு அறநெறி தவறாது நடைபெற்று வந்தபொழுது, அவ்விருவர்க்கும் திருமகனாராகக் கி.பி. 1826 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதினோராம் நாள் வேத நாயகர் தோன்றினார். தொடக்கக் கல்வி குழந்தை செல்வச் சிறப்புடன் வளர்க்கப் பெற்றது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்த வேதநாயகர் குழந்தைப் பருவத்தில் பெற்றோரிடம் ஆடல், பாடல், கதை முதலியன கற்றுவந்தார். வேதநாயகர் குழந்தைப் பருவத்திலேயே கூர்மையான அறிவு படைத்தவராகக் காணப்பட்டார். பள்ளிப்பருவம் அடைந்ததும், பெற்றோர் இவரைப் பள்ளியில் சேர்க்க முற்பட்டனர். அக்காலத்தில் சிற்றூர்களில் தெருப் பள்ளி அல்லது திண்ணைப் பள்ளி என்று வழங்கும் பள்ளிகளே இருந்தன. அங்கேதான் கல்வி தொடங்கப்பெறும். இந்தப் பள்ளிகள் ஆசிரியர் வீட்டுத் திண்ணைகளிலே நடைபெறும். குளத்தூரில் இப்படிப்பட்ட தெருப் பள்ளி யொன்றில் வேதநாயகரும் சேர்க்கப்பட்டார். பத்து வயது வரை அங்கேயே பயின்ற இவர், நன்மாணாக்கர் என்று ஆசிரியராலும் பிறராலும் பாராட்டப் பெற்றார். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்னும் பழமொழிக் கேற்பக் கல்வியாற்றல், நல்லொழுக்கம் முதலியன இளமைப் பருவத்திலேயே இவரிடம் அரும்புவிடத் தொடங்கின. உயர்நிலைக் கல்வி திண்ணைப் பள்ளியில் தேர்ச்சி பெற்ற வேத நாயகர்க்கு, உயர்நிலைக் கல்வி கற்பிக்க விரும்பினார் தந்தையார். ஆனால், அக் கல்வி கற்கத் திரிசிரபுரத்திற்குத்தான் செல்ல வேண்டும். ஆங்கில |