ஆட்சியிருந்த அந் நாளில் தமிழ் மாநிலம் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டிருந்தது. திரிசிரபுரத்தில் தெற்கு மாநில நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அம் மன்றத்தைச் சார்ந்த அலுவலகம் ஒன்றில் தியாகப் பிள்ளை என்னும் பெரியார் ஒருவர் பணி புரிந்துவந்தார். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லவர் என்பதையறிந்த சவரி முத்துப் பிள்ளை அவரையணுகிச் செய்தியைத் தெரிவித்தார். வேதநாயகருடைய முகப் பொலிவைக் கண்ட தியாகப் பிள்ளை மனமுவந்து கற்பிக்க இசைந்தார். வேதநாயகர் கூரிய மதியுடைவராதலால், ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களை ஆர்வத்துடன் ஆழ்ந்து பயின்றார். படிக்க வேண்டு மென்றும் ஆர்வம் இருந்தால் கல்வி எளிதாக வளரும். கல்வியில் ஆர்வம் மட்டும் இல்லையானால், ஆசிரியர் எவ்வளவு முயன்று புகட்டினாலும் மாணவர் உள்ளத்தில் கல்வி படியாது. இவரோ கல்வியில் பேரார்வம் கொண்டவராதலால், எளிதாகவும் விரை வாகவும் இவருள்ளம் பாடங்களைப் பற்றிக் கொண்டது. ஆங்கிலத்தில் நன்கு பேசுவும் எழுதவும் வேதநாயகர் கற்றுக்கொண்டார். இயல்பிலேயே தமிழ்மொழியில் பற்றும் பயிற்சியும் பெற்றிருந்தமையால் தமிழிலும் இவர் சிறப்புற்று விளங்கினார்; இலக்கண இலக்கியங்களில் தெளிந்த அறிவும் பெற்றார். தியாகப் பிள்ளையிடம் பயிலும் பொழுதே கவிதை புனைவதில் இவருள்ளம் நாட்டங் கொண்டது. அப்பொழுதே இவர் அழகிய கவிதைகளை இயற்றத் தொடங்கிவிட்டார். எந்த நிகழ்ச்சியைக் கண்டாலும் அந் நிகழ்ச்சி இவர்தம் உள்ளத்தில் கவிதை உணர்வைத் தூண்டும். வேதநாயகரின் பெரிய தாயார்க்கு அடைக்கல சாமி என்றொரு மகன் இருந்தார். அவர் ஓர் அலுவலை முன்னிட்டுத் திரிசிரபுரத்திற்கு வந்திருந்தார். அவர் வருகையை அறிந்த வேதநாயகர், சிறந்த கவிதை யொன்று பாடி அவரை வரவேற்றார். அடைக்கல சாமியும் அகம் மிக மகிழ்ந்தார். மற்றொரு சமயம் மைத்துன் முறை பூண்ட ஒருவருக்குத் திருமணம் நடைபெற்றது. அத்திருமணத்திற்குச் சென்றிருந்த வேதநாயக்கர், பொருள் செறிந்த, நகைச்சுவை பொருந்திய பாடலொன்றைப் பாடி மணமக்களை வாழ்த்தினார். அப் பாடலின் நயத்தையும் நகைச்சுவையையும் அறிந்து அங்கிருந்தோர் வியந்து வேதநாயகரைப் பாராட்டினர். தம் |