பக்கம் எண் :

202கவியரசர் முடியரசன் படைப்புகள் - 9

எனப்பட்டது. அவ்வாண்டில் வானம் பொய்த்தது. மழையே பெய்யவில்லை. மழை பெய்யாமையினால் விளைச்சல் இல்லை. விளைச்சல் இல்லாமையால் உணவில்லை உணவின் மையால் மக்கள் பெருந் துன்பத்திற்காளானார்கள். எங்கு நோக்கினும் ஒரே அவலநிலை.

எவ்வாறு மக்களுக்கு உதவுவது என்று சிந்தித்து வேதநாயகர் ஒருமுடிவுக்கு வந்தார்; கஞ்சித் தொட்டிகள் வைத்துப் பசியால் வாடிய மக்களுக்குக் கஞ்சி வார்த்து ஓரளவு அவர்களுடைய துன்பத்தைக்களைந்தார்; ஒல்லும் வகையால் அறவினை செய்தார். இஃது இவர் ஆற்றிய சமூகத் தொண்டுகளுள் மிகச் சிறந்ததாகும்.

மொழித்தொண்டு

வேதநாயகர் இயல்பாகவே தமிழ்ப்புலமை பெற்றிருந்தார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர், பாளையங்கோட்டை எச்.ஏ.கிருட்டிணப் பிள்ளை போன்ற பெருமக்கள் தொடர்பால் மேலும் அப்புலமை வளம் பெற்றது. புலமை முதிரமுதிரத் தமிழ்மொழிப் பற்று இவர் நெஞ்சத்தில் வேரூன்றிச் செழித்து வளர்ந்தது. இவர் தமிழைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ‘நம்மைப் பெற்றதும் தமிழ், வளர்த்ததும் தமிழ், நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ், வீட்டு மொழியும் தமிழ், நாட்டு மொழியும் தமிழ்’ என்று கூறுகின்றார்.

நம்முள் பலர் தாய்மொழியாம் தமிழைப் பயிலாது பிற மொழிகளில் ஆர்வங்கொண்டு அவற்றையே பயின்று திரியும் போக்கைக் கண்டு வேதநாயகர் மனம் வெதும்பிப் பேசுகின்றார்; ‘பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளைப் பயின்று விட்டுத் தாய்மொழியாகிய தமிழைப் பயிலாதவர்கள், மாதா வயிறெரிய மகேசுவரை பூசை செய்பவர்க்கு ஒப்பாவர்’ என்கிறார்; இன்னும் ஒருபடி மேலே சென்று, அவர்களை நாடுகடத்த வேண்டுமென்று கூடக் கடிந்துரைக்கின்றார்.

மொழிப்பற்றின் காரணமாக வேதநாயகர் சிறந்த தமிழ்த் தொண்டுகள் பல புரிந்துள்ளார்; உரை நடை நூல்கள் எழுதியும், செய்யுள் நூல்கள் எழுதியும், இசைப்பாடல்கள் எழுதியும், சட்டங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும், இவ்வாறு பல வகையில் தொண்டுகள் ஆற்றியுள்ளார்.

தமிழ்மொழியில் உரைநடை நூல்களை முதன் முதலில் எழுதிய பெருமை இவரையே சாரும். அதனால் இவர் ‘உரைநடையின்