வேதநாயகர்க்கு இயல்பிலேயே தமிழ்ப்புலமை நிறைந் திருந்தது. ஆயினும், இசைப்புலமையும் பாடுந்திறனும் இருந்தால், சிறந்த முறையில் இசைப்பாட்டுகளை இயற்றலாம் என்று இவர் எண்ணினார், அதனால் இசைப்பாட்டுப் பாடும் இரண்டு இசை வாணர்களுடன் தொடர்புகொண்டார்; அவர்களிடம் மாணவராக இருந்து, பெரிதும் முயன்று இசை பயின்றார்; ‘முயற்சி திருவினை யாக்கும்’ என்னும் முதுமொழிக் கேற்ப நன்கு பாடும் ஆற்றலையும் பெற்றார். தமிழ்ப்புலமை, இசையறிவு, பாடுந்திறமை ஆகிய இம்மூன்றும் வாய்க்கப் பெற்ற வேதநாயகர் தமிழில் இசைப்பாட்டுகள் இயற்றினார்; இசையரங்குகளில் அவற்றைப் பாடுமாறு செய்தார். கீர்த்தனை முறையில் தமிழில் பாடமுடி யாதென்ற கருத்தை முரியடித்துக் காட்டினார்; தமிழை மறந்து, பிறமொழி யோசையில் மயங்கி கிடந்த தமிழகத்தில் ஒரு புரட்சியையே உண்டாக்கி விட்டார் என்று சொல்லலாம். எந்தப் புதுமைக்கும் முதலில் எதிர்ப்பு ஏற்படுவது இயல்பே. இவருடைய தமிழிசை மறுமலர்ச்சிக்குப் எதிர்ப்புத் தோன்றியது; இகழ்ந்து கூறியவரும் உண்டு; எள்ளி நகையாடி யவரும் உண்டு; வெறுப்புக் காட்டியவர்களுக்கும் குறைவில்லை. ஆயினும் வேதநாயகர் இவற்றிற்கு அஞ்சினார் அல்லர்; மேலும்மேலும் புதிய பாடல்களை எழுதி அரங்கேற்றினார். விடாது முயன்ற மையால், தமிழிசைப் பாட்டுகள் எங்கும் பரவத் தொடங்கின. இசைவாணர் மேடைதோறும் தமிழிசைப் பாடல்களை முழங்கினர். வானொலி நிலையங்களில் இன்று நாடோறும் நாம் தமிழிசை கேட்டு மகிழ்கின்றோம். ஆயினும், இவருடைய பாடல்களை இன்னும் விரிவாகப் பரப்ப முயலுதல் வேண்டும். இசைவாணர் அவற்றை மறந்து விட்டனரோ என்னும். ஐயம் நமக்கு உண்டாகின்றது. வேத நாயகர் இயற்றிய இசைப்பாடல் களை நன்முறையில் அச்சிட்டுப் பரப்பவேண்டும். வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயத்துக்கு வேதநாயகரை நன்கு அறிமுகஞ்செய்ய வேண்டும். இவரை அறிமுகஞ் செய்துவைத்தால் இளைஞருடைய உள்ளங்களிலே நல்ல கருத்துகள் பல பதியும். அதனால் அவர்கள் நல்ல குடிமக்களாக வளர்ந்து வருவார்கள். நற்குடி மக்களாக வளர்ந்த அவர்களால் நாடு நலம் பெறும். |