110 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
இன்றும் அப்படியேதான். எப்படியோ இரண்டு குழந்தைகள் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கின்றன! ஒரு நாள் முருங்கைக்கீரை விற்றுக் கொண்டு வந்தார் ஓர் அம்மையார். என்று துணைவியார் விலை கேட்டார். ‘துட்டுக்கு ஒரு கட்டு’ எனது விடை வந்தது. (துட்டென்றால் நான்கு காசு. அணாவுக்கு மூன்று துட்டு) என் துணைவியார் ‘முக்காலணாவுக்கு இரண்டு கட்டுத் தருகிறாயா?’ என்றார். ‘கட்டாதம்மா! அணாவுக்கு மூணுகட்டு வேணும்னா எடுத்துக்கங்க’ என்றார். எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. நான் அந்த அம்மையாரைக் கட்டு என்ன விலை? என்றேன் ‘ஒரு துட்டு’ என்றார். துட்டுக்கு எத்தனை காசு? என்றேன். ‘நாலுகாசு’ என்றார். இரண்டு கட்டு எவ்வள வென்றேன். ‘எட்டுக்காசு’ என்றார். எட்டுக்காசு என்று நீ விலை சொல்கிறாய், ஒன்பது காசுக்கு (முக்காலணாவுக்கு) இரண்டு கேட்டால், நீ கட்டாதென்கிறாயே என்றேன். ‘அணாக் கணக்கெல்லாம் தெரியாதையா; துட்டுக் கணக்கிலே எடுத்துக்கிறதாயிருந்தா எடுத்துக்கங்க; இல்லேன்னா விடுங்க’ என்று போய் விட்டார். என் குடும்பத் தலைவியின் திறமை இவ்வளவு தான்; நல்லவர். ஆனால் வல்லவரல்லர். எனது இயல்பு என் திறமையையும் சொல்கிறேன். பாவலர்மணி பழநி வீட்டிற்குச் சென்றிருந்தபொழுது கீரை விற்றது. பெரிய பெரிய இலையுடன் பச்சைப் பசேரென்றிருந்தது. அரையணாவுக்கு ஒரு கட்டு. நாலணாவுக்கு அள்ளிக் கொண்டு வந்தேன். எனக்கு அது தான் முதல் தடவை. பெருமிதத்துடன் வீட்டிற்குள் நுழைந்தேன். என் துணைவி யார், ‘இவ்வளவு அள்ளிக் கொண்டு வந்திருக் கிறீர்களே’ என்றார். கையில் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘ஐயையே! இது சமையலுக்கு உதவாதே. ஒரே முற்றல்?’ என்றதும் என் பெருமிதம் ஓடி விட்டது. பாதியைப் பக்கத்து வீட்டாருக்குக் கொடுக்க, ‘இதை மாடுகூடத் தின்னாது; வேண்டாம்’ என்று கூறி விட்டனர். கீரை குப்பை மேட்டிற்குப் போயிற்று. ‘உங்களுக்கெதுக்கு இந்த வேலை’ என்று துணைவியார் சொன்னது முதல், காய்கறிக்கடைப் பக்கம் திரும்பிப் பார்ப்பதே இல்லை. |