பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்111

நான் என்னை மறந்து வாழும் நேரந்தான் மிகுதியாக இருக்கும். என் இயல்பாக அது அமைந்து விட்டது. அதைப் பாடலாகவடித் துள்ளேன்.

மண்ணில் நடப்பது சிறுநேரம் - நானோ
     வானிற் பறப்பது நெடுநேரம்
நண்ணும் மகிழ்ச்சிகள் சிறுநேரம் - நெஞ்சம்
     நையுந் தளர்ச்சிகள் நெடுநேரம்

வீட்டை நினைப்பது சிறுநேரம் - மனைவி
     வேட்கை யிருப்பதுஞ் சிறுநேரம்
நாட்டை நினைப்பது நெடுநேரம் - கவிதை
     நயந்து தொடுப்பதும் நெடுநேரம்

இத்தகைய என் இயல்பால் நிகழ்ந்த வேடிக்கையான நிகழ்ச்சிகள் சிலவற்றை ஈண்டுத் தருகிறேன்.

ஒருநாள் நானும் பாவலர் மணியும் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறோம். நான், உண்ணும்பொழுது, நடக்கும் பொழுது, இருக்கும் பொழுது, உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது கூட ‘வேறு உலகத்திற்குச்’ சென்றுவிடுவேன். அப்பொழுது நடக்கும் பிற செயல்கள் எதுவும் எனக்குத் தோன்றா. அவ்வாறு வேறு உலக நினைவில் நடந்து கொண்டிருக்கிறேன். எதிரில் யாரோ ஒரு பெண்மணி காய்கறி வாங்கிக் கொண்டு, இடுப்பிற் குழந்தையுடன் வருகிறார். வருகிறவர் எம்மை நோக்கிச் சிரித்துக் கொண்டே வந்தார்.

பதிலுக்கு நாமும் சிரிக்க வேண்டும்; யாரென்று தெரியாமல் எப்படிச் சிரிப்பது? என்று கருதிப் பழநி! பழநி! இந்த அம்மா யார்? எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே! என்றேன். உடனே பழநி, சட்டென்று என்னை நிறுத்தி, ‘அண்ணி அண்ணி! அண்ணன் உங்களை யாரென்று கேட்கிறார்’ என்று சொன்ன வுடன் அந்தப் பெண் மேலும் சிரிக்க, அதன் பின்னரே சிரித்தவர் என் மனைவி யெனத் தெரிந்து கொண்டேன். இன்னும் பழநி இதைச் சொல்லிச் சொல்லி நகையாடுவார்.

இப்படி என்னை மறந்த நிலை பலமுறை ஏற்பட்டிருக்கிறது. தனியாக ஒரு முறை சிற்றுண்டிக்கடைக்குச் சென்று சிற்றுண்டி