பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் | 129 |
துரைராசு தமிழாசிரியர். முடியரசன் தி.மு.கழகத்தான். இருவரையும் ஒன்று சேர விடாமல் தான் வாழ்ந்து வந்தேன். என் கருதியோ இப்படியெல்லாம் தொல்லை தந்து விட்டனர். எனினும் உறுதி குலையவில்லை. கையொப்பமிட்டு அனுப்பிய திராவிடர் கழகக் குடும்பத்தைச் சேர்ந்த என் மாணவனை அழைத்து, தம்பி, நான் வேலையிலிருந்து விலக்கப்பட்டாலோ சிறை செய்யப் பட்டாலோ என் குடும்பம் என்னாவது? ஏன் இப்படிச் செய்தாய்? உனக்கென்ன தீங்கு செய்தேன்? தந்தை பெரியார் தமிழனைக் கெடுப்பதற்கா இவ்வளவு பாடுபடுகிறார். என்றேன். ‘சார்! ஐயா கிட்டே உங்களுக்கு இவ்வளவு ஈடுபாடு இருக்குங் கிறது எனக்குத் தெரியாது, காங்கிரசுக் காரங்க பேச்சைக் கேட்டுக் கையெழுத்துப் போட்டுட்டேன்’ என்றான். ஐயாவிடம் நான் கொண்டிருக்கும் ஈடுபாடு உனக்கே தெரிய வில்லை யென்றால், நான் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவ்வளவு கட்டுப்பாடாக நடந்திருக்கிறேன் என்று தானே பொருள். அப்படிப் பட்ட நான் எப்படி அரசியல் பேசியிருக்க முடியும்? என்றேன். பின்னர், தவறுக்காக அவன் வருந்தினான். திராவிடர் கழகம் பேராயக்கட்சியுடன் இணைந்து பணியாற்றிய நேரம் அது. தமிழர், தம்மையுணராது, தமக்குட்பகைத்துத் தம்மைத் தாமே அழித்துக் கொள்வது நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் இயல்பு. தமிழர் தம்மையுணர்ந்து, தம்முள் இணைந் திருந்தால் பெயரளவில் தமிழ் நாடாக இன்றி, உண்மைத் தமிழ் நாடாகி இருக்குமே! சிறை செய்யச் சூழ்ச்சி அழுக்காறுற்ற - பேராயக்கட்சியினர் சிலர், காவற் கூடஞ் சென்று, சிறை செய்ய வேண்டியவர் பட்டியலில் என் பெயரையும் சேர்த்துள்ளனர். என்னைச் சிறை செய்ய முடிவு செய்யப்பட்டு விட்டது. இதனை யறிந்த தி.மு.க. செயலாளரும் நகர்மன்ற உறுப்பினரும் என்னைத் தலைமறைவாகி விடும்படி செய்தி விடுத்தனர். நான் கொலை செய்தேனா? கொள்ளையடித் தேனா? ஏன் தலைமறைவாக வேண்டும்? என்று மறுத்து விட்டேன். புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார், என்னைச் சிறை செய்யப்போகும் செய்தியறிந்து, ஓடோடி வந்து, ‘ஏன் இப்படி |