பக்கம் எண் :

128கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

நான்:மேடையில் கூட அரசியல் பேசுவதில்லை.
மற்றொன்றையும் கூட நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்று நீங்கள் கல்வியலுவலர். இரண்டாண்டுக்கு
முன் பரமக்குடியில் நீங்கள் தலைமையாசிரியர்.
அங்குள்ள மற்றொரு பள்ளியில் நடந்த மாணவர்
கூட்டத்தில், உங்கள் தலைமையில், ‘முக்கனி’ என்ற
தலைப்பில் நான் பேசினேன். அங்குத் தடுப்பாரும்
இல்லை. அஞ்சவேண்டிய தேவையுமில்லை.
அவ்வாறிருந்தும் ஏதாவது அரசியல் பேசினேனா?
முடிவுரையில் என் கருத்தைப் பாராட்டி நீங்கள்
பேசியதை நினைவு கூர வேண்டுகிறேன்.

அவர்:அடே! அவர் தானா நீங்கள்! சரி; நீங்கள் மாணவர்
களைத் தூண்டிவிடுவதுண்டா?

நான்:மாணவரிடம் மிகவும் கண்டிப்பாக நடந்து
கொள்ளும் இயல்புடையவன் நான். இன்று
தூண்டிவிட்டால், நாளை என் சொல்லுக்கு மதிப்
பளிக்க மாட்டார்கள் என்பதை நான் நன்கு
அறிந்துள்ளமையால் அவ்வாறு செய்ய மாட்டேன்.

ஆனால் நான், உண்மையிலேயே இந்தியெதிர்ப்புக் கொள்கையுடையவன்தான். அதற்குச் சான்று என்
நூல்கள். அவ்வகையில் என் மேல் வழக்குத்
தொடர்ந்தால் பெருமைப்படுவேன். எவ்வகைத்
தண்டனையும் ஏற்றுக் கொள்வேன். தூய ஆசிரியத்
தொழிலை மாசுபடச் செய்வதற்கு நான் வெட்கப்
படுகிறேன்.

மறுநாள் என் நூல்களைக் கொணரச் சொல்லிப்
படித்தார். அதன் பிறகு குற்றம் மெய்ப்பிக்கப்
பெறாமையால் கோப்புகள் மூடப்பட்டன.

1965இல் நாடு தழுவிய இந்தியெதிர்ப்புப் போராட்டம் நடை பெற்ற பொழுது, கல்லூரி மாணவர்கள், ‘இந்தி ஒழிக’ ‘பூங்கொடி தந்த முடியரசன் வாழ்க’ என்றெல்லாம் வழியெங்கும் எழுதி வைத்தனர். அது கண்ட பேராயக்கட்சியினருள் சிறுமையாளர்தாம், இவ்வாறு பழி சுமத்தினர் என்பதைத் தெரிந்து கொண்டேன் .