பக்கம் எண் :

152கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

நட்பின் இலக்கணத்துக்கு எளிதாகப் பொருள் சொல்லி விட்டார்! இவர் மட்டுமா உதவினார்? இவர் தம் துணைவியார் என் உடன் பிறவாத் தங்கை தங்கம்மாள், அவர் தம் மக்கள், மருமக்கள் அனைவருமே என்னைப் பேணிக் காக்கின்றனர்.

பூங்கொடி

‘பிரவேச பண்டிதம்’ படித்துக் கொண்டிருந்த பொழுது, சாத்தனார் எழுதிய மணிமேகலை எங்களுக்குப் பாடமாக அமைந்திருந்தது. பயிலுங்கால் அதனுட்கூறப்பட்ட புனைவு நிகழ்ச்சிகளும் சமையக் கோட்பாடுகளும் பிடிக்காவிடினும், மணிமேகலையின் தொண் டுள்ளமும் துறவுள்ளமும் என் அடிமனத்தைத் தொட்டன. சமைய வாழ்வுக்காக இல்லற வாழ்வைத் துறந்த மணிமேகலை போலத் தமிழ் வாழ்வுக்காக இல்லறவாழ்வைத் துறந்திடும் பெண்ணொருத்தி வேண்டுமே யென ஏங்கினேன்.

ஏக்கம் செயற்படத் தொடங்க. ஒருத்தியைப் படைத்து அவளைக் கதைத் தலைவியாக்கிக் காப்பியம் எழுதினேன். என் காலத்தில் தமிழ்த்தொண்டாற்றிய பற்பல சான்றோரை மாற்றுருவில் உலவ விட்டேன். தமிழுக்காக உயிரீகம் செய்த தொண்டர்களையும் சேர்த்துக் கொண்டேன். என் மகளுக்குச் சூட்ட எண்ணியிருந்த ‘பூங்கொடி’ யென்ற பெயரை அவளுக்குச் சூட்டினேன். உலகமெலாஞ் சுற்றிவரச் செய்தேன். திருமணம் செய்து வைக்காமலேயே தமிழ்த் தொண்டாற்ற வைத்தேன். தமிழுக்காகச் சிறை புகவைத்தேன். இறுதியில் என் இனிய கற்பனை மகளை இறக்க வைத்தேன்.

எழுதத் தொடங்கிப் பல ஆண்டு இடைவெளி விட்டுப் பின், தொடர்ந்து எழுதி முடித்தேன். இறுதிப்பகுதியை ஒரு நாள் இரவு முழுமையும் விழித்திருந்தெழுதி, வைகறை ஆறு மணிக்கு முடித்தேன். முடித்தவுடன் எனக்கேற்பட்ட இன்பம் அளவிடற் கரியது. அண்ணல் சுப்பிரமணியனாரே இதனையும் வெளியிட்டார். இந்நூல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு, இந் நூலைத் தடை செய்யவும், என்னைப் பணியிலிருந்து நீக்கவும் ஏற்பாடு செய்தது. ஆனால் ஆட்சி மாற்றத்தால் ‘பூங்கொடி’ அப்பேற்றையிழந்தனள்.

‘புதுமலர்’ என்ற தலைப்பில் இக்காப்பியம் பற்றிப் புதுக் கோட்டையிற் பேசிய தமிழண்ணல், ‘இந்நூல் உலக ஒருமைப் பாட்டுக் காப்பியம்’ என்று குறிப்பிட்டார். மேலும் அவர்