பக்கம் எண் :

154கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளை பூங்கொடி பற்றிப் பெரிதும் பாராட்டிப் பேசினார். பொன்னாடை போர்த்துச் சிறப்புச் செய்தவர் முறைமன்ற நடுவர் சதாசிவம் அவர்கள்.

நான் நன்றி கூறுகையில், சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம், தி.மு.கழகத்தைச் சேர்ந்த என்னைப் பாராட்டியதில் வியப்பில்லை. கழகம், கழகத்தானைப் பாரட்டுவதில் என்ன வியப்பிருக்கிறது? இக் கழகத்தை, நூல்கள் வெளியிடுங்கழக மாக நான் எண்ணவில்லை. ‘ஆக்சுஃபோர்டு’ பல்கலைக்கழகமாக நினைக்கிறேன். அப்பல்கலைக் கழகத்துக்கு நன்றி கூறி மகிழ்கிறேன்.

சட்டமன்றப் பேரவைத் தலைவர் பொன்னாடை போர்த்துப் பாராட்டியதால், என் பூங்கொடி சொல்லும் மொழிக் கொள்கைகள், சட்ட மன்றத்தால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டன என்று பொருள். முறை மன்ற நடுவர், பொன்னாடை போர்த்து வரவேற்றதால், முறை மன்றமும் ஒத்துக் கொண்டது என்று பொருள் என்று கூறி முடித்தேன்.

பாடுங்குயில்

கருத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, எந்த நிலைக்கும் கட்டுப்படாமல், மனம்போன போக்கில், எதை யெதையோ எழுதி, தமிழுக்குப் புதுமை செய்வதாக எண்ணிக் கொண்டு, கவிதையென்ற பெயரால் இன்றைய இளைஞர் சிலர், வெளியிட்டு வருகின்றனர். இதனைக் கண்டு வருந்தி, இளைஞர் களுக்கு ஒரு வழி காட்டியாக அமையட்டும் என நினைந்து பழைய முறை தவிர்த்துப் புதுமுறையில் ஓசையை அடிப்படை யாக வைத்துச்சில பாடல்கள் எழுதிப் ‘பாடுங்குயில்’ என்ற பெயரால் ஒரு நூல் வெளியிட்டேன். இதனைச் சிவகங்கையில் அகரம் அச்சகம் நடத்தி வரும் கவிஞர் மீரா வெளியிட்டுதவினார்.

ஊன்றுகோல்:

பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் நூற்றாண்டு விழா வந்தது. மதுரைப் பல்கலைக் கழக துணை வேந்தர் முனைவர் வ.சுப.மாணிக்கனார் பண்டித மணியின் நூல்களையும் அவரைப் பற்றிய நூல்களையும் நூற்றாண்டு விழாவில் வெளிக் கொணர முனைந்து, பண்டிதமணியின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பிய மாக்கித் தருமாறு என்பாற் கூறினார். நானும் ஒருவாறிசைந்து காப்பியமாக்கிக் கொடுத்தேன்.