156 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10 |
அமர்த்தினார். 1985-ஆம் ஆண்டு, அப்பணியேற்றுக் காப்பிய நாடகமொன்று, எழுதித் தந்தேன். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி பற்றி நான் எழுதிய புனை கதையைக் கருவாகக் கொண்டு எழுதப் பட்டது அந்நூல்; போர் மறுப்பை மையமாகக் கொண்டது; சற்று அரிய நடையில் அமைந்தது. அந்நூல் அச்சு வடிவம் பெறாமல் தூங்குகிறது. என் சிறுகதைத் தொகுப்பு எக்கோவின் காதல் என்ற பெயரில் அச்சேறியது ஆனால்நூல் வெளிவரவில்லை. கறையான் சுவைத்தது. மற்றும் ‘வள்ளுவர் கோட்டம்’, ‘ஞாயிறும் திங்களும்’, ‘மேடை மலர்கள்’, ‘தாய்மொழி காப்போம்’ ‘நெஞ்சிற் பூத்தவை’ என்ற கவிதை நூல்கள் மற்றும் ‘இளவரசனுக்கு’ ‘எப்படி வளரும் தமிழ்’ என்ற கட்டுரை நூல்கள் எழுதினேன். ஆனால் அவை, கையெழுத்து வடிவிலேயே பேழையில் தவஞ் செய்கின்றன. ஒரு படைப்பாளன் தன் படைப்புகள், மக்கள் மன்றத்திற்கு வராமலிருந்தால், அவன் படைப்பார்வம் எவ்வாறு வளரும்? இன்றைய இலக்கிய வுலகம், ஆரவாரங் களைத் தானே விரும்புகிறது! ஆர்வம் குன்றினும் அவ்வப் பொழுது என் கடமையைச் செய்து வருகிறேன்; எனக்குப் பின்னராவது அவை உலாவரும் என்ற நம்பிக்கையால். முனைவர் சி.பாலசுப்பிரமணியன், முனைவர் எழில் முதல்வன், முனைவர் தமிழண்ணல், முனைவர் சாலை இளந்திரையன், முனைவர் மு.வ. பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ. போன்றோர் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் என் நூல்கள் இடம் பெறு கின்றன. முனைவர் நிலாமணி யென்பார் சாத்தனார் மணி மேகலையையும் என் பூங்கொடிக் காப்பியத்தையும் ‘ஒப்பாய்வு’ செய்து நூலாக வெளியிட்டுள்ளார். என் நூல்களிற்சில அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பாடநூலாக அமைந்துள்ளன. பாடல் பல, பல்கலைக் கழகங் களிலும் உயர்நிலைப்பள்ளிகளிலும் தமிழ்ப் பாடநூல்களிற் சேர்க்கப் பட்டுள்ளன. பெங்களூரில் பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாட நூலில் வீரகாவியத்திலுள்ள தமிழ் வாழ்த்துப் பாடல் சேர்க்கப் பட்டுள்ளது. திருச்சியிலுள்ள த.பா.இந்தி பிரசார சபை வெளியிட்ட தமிழ்ப் பாட நூல்களில் என் கட்டுரை, கவிதைகள் வெளியிடப்பட்டுள்ளன. |