பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்17

என்னுரை

வாழ்க்கை ஒரு போராட்டந்தான்; வாழ்க்கைப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு நிலையிலும் தொல்லைகள் எத்தனை! துயரங்கள் எத்தனை! இடர்ப்பாடுகள் எத்தனை! இடையூறுகள் எத்தனை! தடைக்கற்கள் எத்தனை! அடேயப்பா! கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதை தான் அது.

தொல்லையாலும் துயரத்தாலும் தடைகளாலும் இடையில் ஏற்படும் ஊறுகளாலும் இன்னாதம்ம இவ்வுலகம் எனக் கவன்று, துவண்டு விழுவோர் பலர்.

இன்னா வுலகத்து இனிய காண்குவமென அவற்றை எதிர்த்துப் போராடி, வெற்றி கண்டு "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்று போர்ப்பாட்டுப் பாடி வீறு நடையிடுவோர் சிலர்.

என் வாழ்க்கைப் பயணத்தில் நான் துவண்டும் விழுந்துளேன். துணிந்தும் நடந்துளேன். எப்படியோ எழுபது கற்களைக் கடந்து வந்து விட்டேன். கடந்து வந்த பின் திரும்பிப் பார்த்தேன்; மனக் கண்ணுக்குப் புலனாகிய காட்சிகளையெல்லாம் ஒன்று திரட்டி, நூலாக வடித்துக் காட்டியுள்ளேன். (1990 இல் நான் நோய் வாய்ப் படுமுன் இதனை எழுதிமுடித்தேன்)

என்னைப்பற்றி, என் வாழ்க்கையைப் பற்றி நானே எழுதுவதால், தற்பெருமையெனவோ செருக்கெனவோ பிறர் எண்ணிவிடல் கூடாதென்ற அச்சவுணர்வோடும் அடக்கவுணர்வோடுந்தான் எழுதி முடித்தேன். எங்கேனும் அவ்வுணர்வுகள் மீறப்படுவது காணப் பெறின், இது கவிஞன் இயல்பெனக் கருதி விடுக.