பக்கம் எண் :

208கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

எழுச்சி மட்டுமா தோள் தட்டுகின்றது? கூடவே இயற்கையாக அமையும் சொல்வண்ணம், இன்னிசையாகவே அமையும் சந்த நயம், எண்ணச் சிறப்பாகவே மலரும் உவமையின்பம் அத்தனையும் கவிதை ஒவ்வொன்றுடனும் நடை போட்டுச் செல்கின்றன.

அவை மட்டுமன்று. குறிப்பாக இன்னும் ஒன்றைக் கூற வேண்டும். தடம் புரண்டு தம் போக்காய் எழுதுவதுதான் தற்காலக் கவிதை இலக்கியம் என்னும் தவறான கருத்துக் கொண்டிருக்கும் இன்றைய எழுத்துலகில், தமிழ் மரபு வழுவாமலும் தரம் குறையா மலும் கவிதைகளை ஆக்கித் தந்துள்ளார் கவிஞர்.

மற்றும் கவிதைகள் முழுவதிலும் ஆசிரியரின் பழந்தமிழ்ப் புலமையும் பாட்டுத்திறனும் ஒருங்கே பரவிக் கிடக்கின்றன - என்றாலும் மிகையன்று. உண்மையில் பேராசிரியர் டாக்டர் அ.சிதம்பரநாதனார் தந்துள்ள முன்னுரை இந்நூலுக்குப் பொன்னுரையாகவே பொலிந்து அழகு செய்கிறது'

- தமிழழகன்

'வீரகாவியம்' என்னுங்காப்பியம் குறித்து 1971 பிப்ரவரி வெளிவந்த 'நித்திலக்குவியல்' என்னும் திங்கள் இதழில் எழுதப் பட்ட மதிப்புரை;

'வாழுங் கவிஞர்களில் சிறப்பாகத் தனக்கெனத் தனித்திறனும் தனி நடையும் பெற்றுள்ள முன்னணிக் கவிஞரான திரு.முடியரசன் இவ்வீரகாவியத்தை இயற்றியிருக்கிறார். பழந்தமிழ்ச் சமுதாயத்தின் இரு கண்களான வீரமும் காதலும் இக்காவியத்தில் பூத்துச் சிரிக்கின்றன.

சூரியன் மறைவதனை ஓரிடத்தில் காதலனும் காதலியும் கருத்தொருமித்துக் கலந்தபோது நாமேன் தடையாக இடையில் இருக்கவேண்டும் என நினைந்தான் போல் கதிரவன் மறைந்தான் என்று அழகாகக் கூறுவதோடு நில்லாமல் இன்னும் சிகரம் வைத்தாற்போல அந்தக் கதிரவன் 'உலகியலின் திறமுணர்ந்தோர் செயலே செய்தான்' - என்று கூறுவது நெஞ்சில் பதிகிறது.