பக்கம் எண் :

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம்213

புலவரிருவர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவ்விருவரும் அண்ணனாகவும், தம்பியாகவும் என்னுடன் பழகினர்.

அழகுவேலன் ஒல்லியான உடலுடையவர்; முரட்டுக் குணமு டையவர். திருமாவளவன் அமைதியன மெல்லிய குரலிற் பேசுவார். குத்துச் சண்டை, சிலம்பம் முதலிய விளையாடல்கள் கற்றவர். இருவரிடத்திலும் தமிழையோ தமிழாசிரியரையோ பழித்துப் பேசிவிடின் பேசியவன் எளிதிற்றப்ப முடியாது. வாய் பேசாது; கைதான்பேசும்.

கடற்கரையோ, பொதுக்கூட்டமோ, சிற்றுண்டிக் கடையோ யாண்டு நோக்கினும் எங்களை (மூவரை) ஒன்றாகக் காணலாம். அதனால் எம்மைக் காண்போர் மூவேந்தரென்றே அழைப்பர். போராட்டமாயினும் மூவரும் சேர்ந்தே செல்வோம்.

என் எழுத்துப் பணிக்கு அழகுவேலன் தூண்டுகோலாக விளங்கி வந்தார். ஒருநாள் கடற்கரையில் உரையாடிக் கொண் டிருந்தோம். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி யென்ற பாவேந்தனைப் பற்றி உரை நிகழுங்கால் 'இளம் பெருவழுதி போரில் தோற்றமையால் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருப்பானோ?' என அழகுவேலன் ஐயுற்றார்.

தமிழன் மறத்தை அவ்வாறு இழிவாகக் கருதல் வேண்டா. தற்கொலையாக இருப்பின் 'கடலில் மாய்ந்த' என்றுதான் அமைந் திருக்கும். கடலுள் மாய்ந்த என்றிருப்பதால் எதிர் பாராமல் நிகழ்ந்த நிகழ்ச்சியாகத் தானிருக்கக் கூடும். என்று நான் மறுமொழி தந்தேன். 'அட நீ சொல்வது நன்றாக இருக்கிறது. இதை வைத்து ஒரு கதை எழுது என்று பணித்தார். 'கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி'யென்ற கதை, 'போர்வாள்' இதழில் வெளியாயிற்று.

இவ்வாறு பலமுறை தூண்டித் தூண்டி என் எழுத்தாற்றலை வளர்த்தவர் அண்ணன் அழகுவேலன்.

கவிஞர் வாணிதாசன்:

பிரசண்ட விகடன் துணையாசிரியராக இருந்த அ.இளங் கோவன் அவர்களும் சென்னையிற் பணியாற்றிக் கொண்டிருந்த நானும் புதுச்சேரியைச் சேர்ந்த பாகூருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றிருந்தோம். அங்கே ஒல்லியான - உயராமான ஒருவர்,