பக்கம் எண் :

212கவியரசர் முடியரசன் படைப்புகள் - 10

இல்லத்திற்கு வந்துவிடின், அப்புணையை எளிதில் விட்டுவிட மாட்டேன். அப்புணையின் துணையாற் கரை சேர்வேன். என் வாழ்க்கையில் நட்பு அவ்வளவு உயர்ந்தது.

இளமையிலேயே என்னுளத்தில் முளைத்தெழுந்த நட்புணர்வு வேர் விட்டுக் கிளை விட்டு, நன்கு செழித்துத் தழைத்து, முற்றி முதிர்ந்து வளர்ந்தது. அம்முதிர்ச்சியால் பழகியோரை நண்பராக மட்டுமின்றித் தந்தை அண்ணன், தம்பி, அக்காள், மைத்துனர் என்ற உறவு முறையாற் பழகி வருகிறேன். அவர்களுடைய பெருங் கிழமையாலும் பெருகிய அன்பாலும் வளர்ந்து வரும் பறவையாக நான் வாழ்ந்து வருகிறேன். எவ்வகை வேறு பாடுமின்றி, உள்ளத்துடன் ஒன்றி, நட்பாகி, உறவாகி என் உயிரோடும் உணர்வோடும் கலந்து நிற்போருட் சிலரையேனும் ஈண்டு நினைவு கூர்தல் என் கடப் பாடாகும்.

கம்பம் துரை

கம்பம் என்னும் ஊரில் சுருளி என்ற துரை என்பவர் என் பிள்ளைமைப் பருவத்திலிருந்தே பழகியவர். எம் இருவர் குடும்பமும் எங்கள் பாட்டியார் காலத்திலிருந்து உறவு முறையிற் பழகிய குடும்பம். துரை, எனக்கு மைத்துனர் முறையிற் பழகிய நண்பர்.

சிறு பிள்ளையில் எங்களைக் காணவில்லை என்றால் எங்கள் வீட்டார் ஆற்றுக்குத்தேடி வந்துவிடுவர். அங்கே இருவரும் மீன் பிடித்துக்கொண்டிருப்போம். அதற்குரிய அடியும் வாங்கிக் கொள்வேன். நோகாமல் மீன் பிடித்து வந்து வீட்டிற் சட்டியி லிட்டு வளர்ப்பதிலே எனக்குப் பேரின்பம். ஆனால் மறுநாட் காலை வெறுஞ் சட்டிதான் காணப்படும். காகம் கொத்திச் சென்றுவிட்ட தென வீட்டார் ஆறுதல் கூறுவர்.

பல்வேறு உதவிகள் செய்து, அன்பு பொழிந்து என்னை வளர்த்த வருள் ஒருவர் துரை. இறுதி வரை திராவிடர் கழகத்திலேயே பணியாற்றி அணிமையில் இயற்கை எய்தினார்.

தில்லை அழகுவேலன்

சென்னை முத்தியாலுப் பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது என்னுடன் தில்லை.தா.அழகுவேலன், திருமாவளவன் என்னும்